ஏதோ ஒரு நோக்கம் கொண்ட ஐஜிபியின் அழைப்பை சுரேந்திரன் குப்பையில் தூக்கியெறிய வேண்டும்

-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், அக்டோபர் 13, 2013.

1 igpஇந்நாட்டு போலீசாரின் நடத்தை, குறிப்பாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் நடத்தை, அதிலும் குறிப்பாக இன்றைய ஐஜிபி காலிட் அபு பாக்கரின் நடத்தை, போலீஸ் படையின் மீது மக்கள் வைத்திருந்த, வைத்திருக்க வேண்டிய நன்மதிப்புக்கு, நம்பிக்கைக்கு சவால் விடுவதாகத் தெரிகிறது.

அவர்கள் எது வேண்டுமானலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், ஏளனப்படுத்தலாம் என்ற நிலை இன்று போலீஸ் படையில் உருவாகியிருக்கிறது.

தேசிய கணக்காய்வாளர் அவரது 2012 ஆண்டுக்கான அறிக்கையில் போலீஸ் படை நிருவாகத்தில் ரிம1.3 மில்லியன் மதிப்புள்ள பொருள்கள், 44 துப்பாக்கிகள் உட்பட, காணாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார். இந்த இழப்பிற்கு பொறுப்பேற்று முறையாக பதில் அளிக்க வேண்டிய, இன்னும் கூறப்போனால், பதவி துறக்க வேண்டிய, போலீஸ் படையின் தலைவர் காலிட், இது என்ன ஒரு பெரிய விசயமா என்று கேட்கும் மனப்பாங்குடன் துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம் என்ற ஏளனத் தொனியில் பதில் கூறியுள்ளார்.

“விழுந்திருக்கலாம்” என்பதன் அர்த்தம் என்ன? இது ஓர் ஊகமான பதில். கடலில் “விழுந்து விட்டன” என்று கூறியிருந்தால், அது உண்மையாக இல்லாவிட்டாலும், அது அவ்வாறான சம்பவம் நடந்து விட்டது என்று உறுதிப்பட கூறுவதாகும். “விழுந்திருக்கலாம்” என்றால், அந்த 44 துப்பாக்கிகளுக்கும் என்ன ஆயிற்று என்று அவருக்கு உறுதியாக கூற இயலவில்லை அல்லது அவர் தயாராக இல்லை என்பது பொருளாகும். மேலும், அப்பதிலில் அவரின் ஆணவத்தைக் காணலாம். நான் நம்பர் ஒன், இதை எல்லாம் கேட்க நீங்கள் யார் என்பது அப்பதிலில் தொனிக்கிறது.

இவ்வாறான ஆணவமும் இறுமாப்பும் கொண்ட போலீஸ் படையின் தலைவர் காலிட்டும் வக்கர புத்தி படைத்த உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடியும் “சூட் பர்ஸ்ட்” என்ற விவகாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அது குறித்து கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.1 igp

குண்டர் கும்பல் உறுப்பினர்களுடான மோதல்களில் போலீசார் அவர்களை சுட்டுக் கொல்வது மக்களின் கவனத்தை தற்போது வெகுவாக ஈர்த்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் போலீசாரின் சுட்டுத்தள்ளும் போக்கை கடுமையாகச் சாடி வருகிறார். நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலில் இல்லை. எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் போலீஸ் படை சட்ட ஆளுமைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை சுரேந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

குண்டர்களுக்கு ராஜ மரியாதை கொடுக்க வேண்டும் என்றோ, போலீஸ் படையினர் செத்துத் தொலையட்டும் என்றோ சுரேந்திரன் கூறவில்லை. ஒருவர் எவராக இருந்தாலும், அவர் விண்ணை முட்டும் உயர் பதவியில் இருந்தாலும், சட்டம் அவரையும் அவரது பதவியையும் விட ஒருபடி உயர்வானது என்ற அடிப்படையில்தான் குண்டர்களை சுட்டுத்தள்ளும் போலீசாரின் சமீபகால நடவடிக்கைகளை சுரேந்திரன் குறைகூறி வருகிறார். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான அவருக்கு போலீசாரின் நடவடிக்கை குறித்து கருத்துரைக்கும் உரிமை உண்டு, அதற்கு பதில் கூற வேண்டிய மறுக்க முடியாத கடப்பாடு போலீஸ் படையினருக்கு உண்டு.

தற்போது, இந்நாட்டில் குண்டர்களின் அட்டகாசம் அத்துமீறி போய்க் கொண்டிருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, பாதிக்கப்படும் மக்கள் கடுஞ்சினம் கொண்டுள்ளனர். குண்டர்களின் அபரீத வளர்ச்சிக்கான காரணம் என்ன, யார் என்பது வேறு விசயம். குண்டர்கள் அடக்கப்பட வேண்டும். குண்டர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும் போலீசார் கடும் விளைவுகளை, உயிர் இழப்பு உட்பட, எதிர்கொள்ள வேண்டியுள்ளதையும் போலீசாரின் உரிமைகள் பற்றியும் சுரேந்திரன் போன்றவர்களுக்கு சுட்டிக் காட்டுவதில் போலீஸ் படைத் தலைவர் காலிட் கவனம் செலுத்துகிறார்.

குண்டர்களுடன் மோதும் போலீஸ் படை உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைக் காணவும் அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும்1suren1 நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரனுக்கு போலீஸ் படை தலைவர் காலிட் அழைப்பு விடுத்துள்ளார். இது ஏற்புடையதல்ல. விண்வெளிக்கு அனுப்பப்படும் வான்கலங்கள் வெடித்துச் சிதறுவது குறித்து கருத்து தெரிவிக்கும் ஒருவரை அது பற்றிய அனுபவத்தைப் பெற அவரை விண்வெளிக்குச் செல்ல அழைப்பு விடுப்பது போன்றதாகும் சுரேந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு. விண்வெளிக்கு அனுப்பப்படும் மிருகங்களுக்குக்கூட முறையான பயிற்சி முறையாக அளிக்கப்படுகிறது.

ஆபத்துக்குள்ளாவதும் உயிர் இழப்பதும் அப்பம் போடும் தொழிலாளியிலிருந்து அணுசக்தி நிலையத்தின் தொழிலாளி வரையில் எதிர்பாராத வகையில் சந்திப்பது உலகமறிந்த உண்மை. ஆனால், அது அவர்களுடைய தொழில் சார்ந்த ஒரு கூறல்ல. ஆயுதப்படை உறுப்பினர்களின் நிலை முற்றிலும் வேறுபட்டது. அவர்களுடைய தொழிலின் தன்மையே ஆபத்து மற்றும் உயிர் இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காக, ஆயுதப்படையினருக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உயிரை அழிப்பதற்கும் உயிர் இழப்பைத் தவிர்ப்பதற்கும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

போலீஸ் மற்றும் இதர ஆயுதப் படையினர் ஆபத்திற்குள்ளாவதையும் உயிர் இழப்பதையும் எவரும் விரும்புவதில்லை. ஆனால், அவை அவர்களுடைய பணி சார்ந்த அங்கமாக இருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர்.

நாடாளுமன்ற உறுப்பினரான சுரேந்திரன் ஆயுதப்படையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சிறப்பு தற்காப்பு பயிற்சி எதுவும் பெற்றவர் அல்ல. ஆனால், அவருக்கும் ஆபத்து ஏற்படலாம். மகாத்மா காந்திக்கே ஆபத்து ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், சுரேந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு ஒரு நிபந்தனை உண்டு. அவரது உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு போலீசார் பொறுப்பல்ல என்று அவர் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும்.

போலீஸ் படை தலைவர் விடுத்துள்ள இந்த நிபந்தனையுடனான அழைப்பின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, சுரேந்திரன் இந்த அழைப்பை குப்பையில் தூக்கியெறிய வேண்டும்.

TAGS: