பிரச்னைகள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. குடிசையாக இருந்தாலும் சரி, கோபுரத்திலும் வாழ்ந்தாலும் சரி பிரச்னைகள் இல்லாத இடமே இல்லை. அதைத்தான் “வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பார்கள். ஏழைக்கு 100 ரூபாய் பிரச்னை என்றால், பணக்காரர்களுக்கு 100 கோடி பிரச்னை. பணத்தின் மதிப்புதான் வித்தியாசமே தவிர பிரச்னையின் தன்மை ஒன்றுதான்.
பணப்பிரச்னை போன்றே இதர அத்தனை பிரச்னைகளும், கணவன் மனைவியை கொடுமைப்படுத்துவது, அவளை விட்டு விட்டு இன்னொருத்தியுடன் வாழ்வது. குடும்பத்துக்கு அடங்காமல் தறிகெட்டு வாழும் பெண்கள், பிள்ளைகளை தவிக்க விட்டுச் செல்லும் பெற்றவர்கள், பாதை மாறும் குடும்பங்கள், குடியால் குடும்பத்தை அழித்தவர்கள். இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும் அது ஏழைகளுக்கு மட்டுமே உரியதல்ல பணக்காரர்களுக்கும் உரியதுதான். ஏழைகளின் பிரச்னை உடனேயே வீதிக்கு வந்துவிடும். பணக்காரர்களின் பிரச்னை மாளிகைக்குள் மறைந்து கொள்ளும் அவ்வளவுதான். ஆனால் ஏழைகளின் பிரச்னைகளை மட்டும் வெளிச்சம்போட்டு காட்டி தங்களின் டி.ஆர்.பி., ரேட்டை உயர்த்தி, மனசாட்சி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது தொலைக்காட்சி நிறுவனங்கள்.
உலகத்தின் எந்த நாட்டிலும் இதுபோன்று குடும்ப பிரச்னைகளை தொலைக்காட்சி கேமராமுன் சொல்ல வைத்து அவர்களை அழவைத்து அதையே காசாக்கும் கொடூரம் நடக்கவில்லை. ஏன் அண்டை மாநில தொலைக்காட்சிகளில்கூட இந்த கொடூரம் அரங்கேறவில்லை. நான்கு சுவர்களுக்குள், அல்லது தெருவுக்குள். அதிகபட்சம் அந்த ஊரோடு முடிந்து போகிற விஷயங்களை உலகத்திற்கே வெளிச்சம்போட்டு காட்டுவதன் மூலம் அந்த ஏழைகளின் வாழ்க்கையில் வெளிச்சம் வந்து விடுமா என்ன? தொலைக்காட்சிகளுக்கு வேண்டுமானால் வருமானம் பெருகலாம்.
ஒரு தனிநபரின் பிரச்னையை, ஒரு குடும்பத்தின் பிரச்னையை அவர்களே தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், அதில் தீர்வு ஏற்படாவிட்டால் போலீஸ் இருக்கிறது, சட்டம் இருக்கிறது, நீதிமன்றம் இருக்கிறது. இவர்கள் யார் இடையில் பஞ்சாயத்து பண்ண இதுவும் ஒருவகையான கட்டப்பஞ்சாயத்துதானே, அப்படியென்றால் சட்டப்படி தவறுதானே…
எங்கோ ஒரு இடத்தில் தவறு நடக்கலாம். நாட்டு நடப்பே இப்படித்தான் என்கிறது இந்த நிகழ்ச்சிகள். ஒரு நிகழ்ச்சியில் ஒரு தாயை மகன் செருப்பால் அடிக்கிறான். மனைவியை கணவன் அடிக்கிறான். மகளை தாய் கடும் ஆபாச சொற்களால் பேசுகிறாள், உச்சகட்ட கொடுமை ஒரு மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்கிறாள். காவல் துறையின் ரகசிய விசாரணை மையத்தில் இடம்பெற வேண்டிய விஷயம் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியாக வடிவம் எடுத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை.
வடநாட்டிலிருந்து இங்கு வந்து கால்பதித்த ஒரு தொலைக்காட்சி இதனை முதலில் அரங்கேற்றியது. அடுத்த வீட்டு ரகசியத்தை, அவலத்தை தெரிந்து கொள்வது நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தமிழ் மக்களின் இந்த பிரத்யேக குணமே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஒரு நிகழ்ச்சி வெற்றியடைந்து விட்டால் அதை அப்படியே காப்பி அடிப்பதோடு. அந்த நிகழ்ச்சி நடத்தியவரையும் விலைபேசி அழைத்து சென்று விடுவது மற்ற தொலைக்காட்சிகளின் தொழில் தர்மம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் எல்லாத் தொலைக்காட்சிக்கும் புற்று நோய் போல பரவியது.
பல்வேறு தலைப்புகளில் எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துபவர்களின் குடும்பத்திலேயே பிரச்னை இருக்கிறது. அதனை இவர்கள் கேமரா முன் விவாதிப்பார்களா, விளக்குவார்களா? பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் மற்றவர்கள் பிரச்னைக்கு தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சரி இந்த நிகழ்ச்சி நியாமானதுதான், தேவையானதுதான் என்று வைத்துக் கொள்வோம். ஏன் இந்த நிகழ்ச்சியில் ஒரு கலைக்குடும்பதின் மூத்த மகள் தன் குடும்பத்தில் ஏற்படுத்திய பிரச்சனை பற்றி விவாதிக்கவில்லை. ஒரு மாவட்ட செயலாளர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று ஒரு இளம் பெண் புகார் செய்தாரே அந்த பெண்ணையும், அந்த மாவட்ட செயலாளரையும் அழைத்து வந்து இவர்களால் பஞ்சயாத்து பண்ண முடியுமா? ஒரு இயக்குனர் மகளின் காதல் பிரச்னை பெரிதாக பேசப்பட்டபோது ஏன் இவர்கள் அந்த இரண்டு குடும்பத்தையும் தங்கள் ஸ்டூடியோவுக்குள் அழைத்து வரவில்லை. பிரபுதேவாவும்-ரமலத்தும் பிரிந்தபோது இருவரையும் அழைத்து ஏன் சேர்த்து வைக்க இவர்கள் முயற்சிக்கவில்லை. காரணம் அவர்கள் பணக்காரர்கள். இதுவரை எந்த ஒரு பணக்கார குடும்பமும் இவர்களின் கேமரா முன்பு போடப்பட்ட சோபாக்களில் உட்காரவில்லையே ஏன்?.
ஆக, ஏழைகள் இளிச்சவாயர்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறவர்கள் என்ற எண்ணம்தானே அவர்கள் குடும்ப விஷயங்களை முச்சந்திக்கு கொண்டு வர வைக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை கொண்டு வர தனி ஏஜெண்டுகள் இருக்கிறார்களாம். பிரச்னையை கண்ணீரோடு சொல்லிவிட்டு வீடு திரும்புகிறவர்களுக்கு கணிசமான பணமும் தரப்படுகிறதாம்.
காதலால் கைவிடப்பட்ட பெண்கள், ஒரு தீயவனிடம் கற்பை பறிகொடுத்த பெண். கணவனால் சந்தேகப்பட்டு விரட்டப்பட்ட பெண் இவர்கள் முகத்தை குளோஸ்-அப்பில் உலகத்துக்கு காட்டுகிறார்களே. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பெண் எப்படி இந்த உலகில் முகத்தை காட்டிக் கொண்டு நடப்பாள்.
எந்த ஒரு தனிப்பட்ட பிரச்னையையும் பொதுமைப்படுத்துவன் மூலம் அது பெரிதாகத்தான் செய்யுமே தவிர அதற்கு தீர்வு தருவதில்லை என்பதை தொலைக்காட்சி நிறுவனங்கள் உணரவேண்டும். டி.வி. விளம்பரம் பார்த்து பொருட்கள் வாங்கி அதன் மூலம் மறைமுகமாக டி.வி.நிறுவனங்களுக்கு தங்கள் பணத்தை கொடுக்கும் அப்பாவி மக்களை இனியேனும் அவமதிக்க வேண்டாமே…!!
இந்த மாதிரியான சினிமா,சிரியலை பார்த்து டென்ஷன் ஆவதைவிட வேறு படத்தை எதையாவது பார்த்துவிட்டு ஹெபியாக இருக்கலாம், கதவை திறந்துவை ஏதாவது வரும்.