கல்விப் பெருந்திட்டம்: வரலாற்றுப் பிழைகளின் தொடர்ச்சி

MEB-2013-2025முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 13, 2013.

 

மலேசியக் கல்வித் துறையின் கலைத்திட்ட வரலாற்றில் இது வரை நாம் கண்டதையும் அவை நமது அறிவுப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய கடுமையான நேர்வுகளையும் இக்கட்டுரை சுருங்க உரைக்கிறது. தொடர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தரப் போகும் பயன் அல்லது விளைவுகளைச் சிந்திக்கிறது.

 

அனைத்துலகக் கல்வி நிபுணர்கள், உள்நாட்டு கல்வியாளர்கள் எல்லாரையும் கலந்து கொண்டுதான் இந்தக் கல்விப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது என்று கல்வி அமைச்சர் கூறுகிறார். என்றாலும் கல்வி சார் கலைச்சொற்களின் திரட்சியைத் தவிர எதிர்காலத்திற்கான நம்பிக்கையூட்டும் ஒளி வீச்சுகளை இதில் காண முடியவில்லை.

 

வேறெங்கோ அல்ல 292 பக்கங்கள் கொண்ட இத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களே இதுவரை வந்து சென்ற கல்வித் திட்டங்களின் தோல்விகளை அடையாளப்படுத்துகின்றன. என்றாலும் தோல்விக்கான காரணங்களைக் காண்பதிலும் அவை இனியும் நேராமல் தடுப்பதற்கான கல்வி நெறி சார்ந்த முடிவுகளையும் கல்வி அமைச்சர் காட்டவில்லை.

 

மலேசியாவின் பல இனப் பண்பாடுகள், இவை ஏற்படுத்திய நெருக்கடிகள், அரசியல் ஆளுமைக்காக ஒரு குறிப்பிட்ட  குழுவினர் நிகழ்த்திய செயல்பாடுகளால் நேர்ந்திருக்கும் சரிவுகள் தனித் தன்மையானவை. இவற்றிலிருந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் திருந்திய சிந்தனையை நாடு வேண்டி நிற்கிறது. ஆனால் கல்வி அமைச்சர் நாட்டுக்கு வெளியே போய் அனைத்துலக அடைவுகளை அளவுகோலாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இந்த அளவுகோல் சுட்டும் அடைவுகளை அடைவதற்கான அறிவு சார் செயல்பாடுகளை அவர் காட்டவில்லை.

 

அனைத்துலக மதிப்பீடு

 

2009ஆம் ஆண்டில் எழுபத்தேழு நாடுகள் உள்ளிட்ட அனைத்துலக மாணவர் திறன் ஆய்வில் மலேசியா 74வது இடத்தில் இருக்கிறது. அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் மலேசியா மூன்றாம் இடத்தை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைக்கிறார் கல்வி அமைச்சர்.

 

இது நிற்க, வாசிப்பு, அறிவியல், கணிதம் ஆகிய திறன்களில் மலேசியா முறையே 55, 52, 57ஆம் இடங்களில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, ஹாங்காங், சங்காய் சீனா, பின்லாண்ட் ஆகிய நாடுகள் இருக்கின்றன. 57வது இடத்திலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் மலேசியா இருக்க வேண்டும். இலக்கு கவர்ச்சியாகவே இருக்கிறது. என்றாலும் முதல் ஐந்து நிலைகளில் இருக்கும் நாடுகளின் கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் செயலாக்கமும் மலேசியக் கல்வி அமைச்சர்களால் எக்காலத்திலும் எண்ணிப் பார்க்க முடியாதவை என்பதால் இந்த இலக்கு வெறுங் கனவு என்பதில் ஐயமில்லை.

 

இதற்கிடையில் இன்னொரு புள்ளி விவரமும் கண்ணைப் பறிக்கிறது. 2010இல் எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழிப் பாடத்தில் மலாய் மாணவர்கள் 84%, சீனர் 63%, இந்தியர் 57% கிரடிட் நிலையில் தேறியுள்ளனர். அதே வேளை ஆங்கில மொழியில் சீனர் 42%, இந்தியர் 35%, மலாய் மாணவர் 23% கிரடிட் நிலையில் தேறியுள்ளனர்.

 

அனைத்துலகக் கல்வித் தரத்தில் உயர்வதற்கு ஆங்கில மொழியறிவு கட்டாயம். சீனர் 42%, இந்தியர் 35%, மலாயர் 23% என்ற இந்த நிலையிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளில் அனைத்துலக மூன்றாம் நிலையை எட்டிப் பார்க்க முடியுமா? முதல் ஐந்து நிலைகளில் உள்ள நாடுகள் ஆங்கிலப் பயிற்சியை முன்னிலைப்படுத்தும் நாடுகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்களில் மலாய் மாணவர்களே பெரும்பான்மை. இவர்கள் மற்ற இருவரைக் காட்டிலும் ஆங்கிலப் பாடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது மலேசிய மாணவர்களின் அனைத்துலக தர வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.

 

மலாய் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமைக்கு வழி காட்டும் தனித் திட்டங்கள் ஏதும் இப்பெருந்திட்டத்தில் சொல்லப்படவில்லை. பொதுவாக எல்லா மாணவர்களின் ஆங்கிலப் புலமையைக் கருத்தில் கொண்டு ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கல்வி முறையில் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் ஆகியன தொடக்க நிலை பயிற்று மொழிகளாகவும் aru nagappanஆங்கிலம் இடைநிலை, உயர்நிலை பயிற்று மொழியாகவும் இருந்தன. ஆங்கிலேயர் அரசு நிர்வாகத் துறைக்கு ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளை உருவாக்குவதற்கு ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளை உருவாக்கினர். அரச குழந்தைகளும் அரண்மனை சமூகத்தினரும் இப்பள்ளிகளில் படித்ததோடு மேற் கல்வியை இங்கிலாந்தில் சென்று முடித்தனர். தொடக்க, இடைநிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இராணுவக் கல்லூரிகள் இப்படி எல்லாமே ஆங்கில வழிக் கல்வியை அளித்தன. அப்போது மலேசியரின் குறிப்பாக மலாய்க்காரர்களின் ஆங்கில மொழித் தரம் மிகச் சிறந்த நிலையில் இருந்தது.

 

விடுதலைக்குப் பின்னர் தேசிய உணர்வும் மலாய் மேலாண்மையும் இனப் பாகுபாடும் கல்வித் துறையில் நுழைந்தன. மலாய் பயிற்று மொழியானது. ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டதால் ஆங்கிலேயர் உருவாக்கி விட்டுச் சென்ற தரமான பள்ளிகளில் தரமான ஆசிரியர்களிடம் படித்தும் இந்த வாய்ப்புகள் கிடைக்காத மற்ற மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் ஆங்கில மொழித்திறனை மலாய் மாண்வர்கள் பெற முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன?

 

மலாய்க்காரர்களின் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்விச் சான்றிதழ்களும் அரசாங்க வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. இவை ஆளும் அதிகாரத்தை வழங்கும் அம்னோ பதவிகளைக் குறி வைத்தும் செய்யப்பட்டன. இதனால் கல்விக் கொள்கைகளும் தேர்வு முறைகளும் மலாய் மேலாண்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன. மலேசியக் கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு இவை முக்கிய காரணிகள். இந்த வரலாற்றுப் பிழைகளைத் திருத்தும் முயற்சிகள் நமது கல்வித் திட்ட வரலாற்றிலும் இல்லை. இந்தப் பெருந்திட்டத்திலும் இல்லை.

 

எடுத்துக்காட்டு: 1983இல் கே.பி.எஸ்.ஆர். (kurikulum Baru Sekolah Rendah) தொடக்கப் பள்ளிகள் அனைத்துக்கும் மிகுந்த ஆரவாரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1982இல் 305 பள்ளிகளில் சோதிக்கப்பட்ட பின்னரே அனைத்துப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் வாசிப்பு, எழுத்து, கணக்கு ஆகிய மூன்று திறன்களை முன்னிலைப்படுத்துவதாக இருந்தது. இதுவே 1993இல் ஒருங்கிணைக்கப்பட்ட தொடக்கப் பள்ளிக் கலைத்திட்டமாகப் (Kurikulum Bersepadu Sekolah Rendah) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் 2003இல் மதிப்பீடு செய்யப்பட்ட போது எதிர்பார்த்த பயனைத் தரவில்லை என்ற முணுமுணுப்போடு முடிவு கண்டது. இதனை இக்கல்விப் பெருந்திட்டம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

இப்போது ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்  என்பதை யூகிப்பதற்கு அதிக அறிவு தேவையில்லை. ‘கட்டாயம் படிக்க வேண்டும், தேர்வில் தேற வேண்டிய அவசியம் இல்லை’ என்ற இப்போதைய நிலையே நீடிக்கலாம். தேர்வில் தேற வேண்டும் என்றால் தேறாவிட்டால் நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும். மெட்ரிகுலேசன் அல்லது உயர்கல்வி வாய்ப்புகளுக்கு ஆங்கிலத் தேர்ச்சி கட்டாயம் என்றால் மலாய் மாணவர்களைத் தற்காக்கும் தேசியவாதிகளின் போராட்டம் எப்படி இருக்கும் என்றும் சிந்திக்க வேண்டும்.

 

ஏற்கனவே அறிவியல், கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டுச் சில ஆண்டுகளில் மீண்டும் தாய்மொழிகளுக்கு மாற்றப்பட்டதை உடன் சேர்த்துச் சிந்தித்தால் ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்பது தேசியவாதிகளின் எதிர்வினைகளுக்கு உட்படப் போவது நிச்சயம்.

 

இவற்றைப் பற்றியெல்லாம் கல்வி அமைச்சர் சிந்தித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சீன, தமிழ்ப் பள்ளிகளில் மலாய்ப் பாட நேரத்தைக் கூட்டுவது பற்றிச் சிந்திக்கிறார். அதைப் பற்றியே பேசி வருகிறார். வாரத்திற்கு 180 நிமிடமாக இருக்கும் மலாய் மொழிப் பாடத்தை 240 நிமிடமாக உயர்த்திவிட்டால் தேசிய ஒற்றுமை உடனே பூத்துக் குலுங்கிவிடும் என்பது அறிவு சார்ந்த வாதமாகாது. மாறாக இது இன அழிப்பை நோக்கமாய்க் கொண்ட நீண்ட காலத் திட்டத்தின் ஒரு தொடக்கமே ஆகும்.

 

தேசிய ஒற்றுமை இல்லாமைக்கு மலாய் மொழித் திறன் மட்டுமே காரணமா?

 

muhyiddinமலாய் தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் எதிர்நோக்கும் இனப்பாகுபாடு பதின்ம வயது உள்ளங்களில் ஆறாத காயங்களை உண்டாக்கியுள்ளன. ஆசிரியர் சிலர் செய்யும் மனோவியல் வன்கொடுமையும் இனப்பாகுபாட்டு வன்செயலும் இன்றும் கூட நடந்தபடி உள்ளன.

 

இவற்றையெல்லாம் கடந்து எஸ்.பி.எம் தேறிய பின்னர் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் போதும் பூமிபுத்ரா அல்லாதார் எதிர்நோக்கும் இனப்பாகுபாடு தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பெருந் தடையாக உள்ளது. உயர்கல்விக்கு இந்திய, சீன மாணவர்கள் பெறுவது வட்டியுடன் கூடிய கடன், பூமிபுத்ராக்கள் பெறுவது கல்வி உதவி. எத்தனையோ தடைகளைத் தாண்டி வேலை வாய்ப்புக்கு வரிசை பிடிக்கும் போதும் இனப்பாகுபாடு இடித்துத் தள்ளுகிறது. இப்படி ஒரு பக்கம் இனப்பாகுபாட்டைச் சட்டத்தின் துணையோடு செயல்படுத்திக் கொண்டு இன்னொரு பக்கம் தேசிய ஒருமைப்பாட்டையும் பேசுவது நம் நாட்டில் மட்டுமே நடக்கும் நாடகமாக இருக்க முடியும்.

 

தமிழ், சீனப்பள்ளிகள்

 

தமிழ், சீனப் பள்ளிகள் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்கும் என்று இதில் கூறப்பட்டுள்ளது (பக்கம் 191). பெற்றோர்கள் தாம் விரும்பும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். கடந்த 2000ஆம் ஆண்டில் சீனப்பள்ளிகளில் பயின்ற சீன மாணவர்கள் 92%. இது 2011இல் 96%ஆக உயர்ந்தது. தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 2000ஆம் ஆண்டில் 47%. இது 2011இல் 56%ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழ், சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இப்பள்ளிகளை மூடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவற்றின் அடையாளத்தை மாற்றும் புதிய போக்கில் அரசு செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மலாய் மொழிக்கான நேரத்தைக் கூட்டுவதன் மூலம் அதிகமான மலாய் ஆசிரியர்களைத் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு அனுப்பலாம். தமிழ், சீனப் பள்ளிகளில் மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே மலாய் கற்பிக்கலாம் என்ற கொள்கை கல்வி அமைச்சின் ஆய்வில் உள்ளது. மேலும் இப்பள்ளி நிர்வாகப் பணிகளில் மலாய்க்காரர்கள் இடம் பெறும் பொருட்டு அவர்களுக்குத் தமிழ், சீன மொழிகளில் பயிற்சி வழங்கவும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது..

 

‘ஒரு மொழிப் பள்ளியே தேசிய இலக்கு’ என்று அவ்வப்போது சொல்லப்படுவது சீன, தமிழ்ப் பெற்றோர்களின் எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்யும் முயற்சியாகவே கருத வேண்டும்.

 

இக்கல்விப் பெருந்திட்டத்தின் கலைத் திட்டத்தில் பெரும் புரட்சிகள் ஏதும் இல்லை. கல்வி அமைச்சின் செயல்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, மாவட்ட, மாநிலக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளடக்கிய மனித வளத்தைச் செம்மைப்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

 

நன்னெறிப் பாடம்

 

முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கான நன்னெறிப் பாடத்தில் பிற சமய அறநெறிகளும் இணைக்கப்படும் என்ற பரிந்துரை செயல்படுத்தப்படும்போது இஸ்லாமிய அறநெறிகள் என்ற போக்கில் இஸ்லாமிய சமயக் கூறுகள் இப்பாடத்தில் நிரப்பப்படலாம். தற்போது இடைநிலைப்பள்ளி வரலாற்றுப் பாடத்தில் 40% வரை இஸ்லாமிய வரலாறு சேர்க்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டால் நன்னெறிப் பாடமும் அந்த நிலையை அடையலாம் என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை.

 

மலாய் மொழி

 

மலாய்ப் பள்ளிகளுக்கு நிகராகத் தமிழ், சீனப் பள்ளி மாணவர்களும் மலாய் மொழித் திறம் பெற வேண்டும் என்பதற்காக ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வுத் தாள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலாய் ஒரு குழுவினருக்கு முதல் மொழியாகவும் மற்றவர்களுக்கு இரண்டாம் மொழியாகவும் இருக்கும்போது எல்லாரும் சமமான தகுதி பெற வேண்டும் என்பது ஒரு தலை முடிவு. உயர் கல்வி வாய்ப்புகளுக்காக மாணவர்கள் தரம் பிரிக்கப்படும் போது முதல் மொழிக் குழுவினர் முன்னணியில் இருப்பர். மற்றவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு மலாய் மொழித் தரம் முக்கிய காரணி ஆகலாம்.

 

தமிழ் ஆசிரியர்ப் பயிற்சி

 

எஸ்.பி.எம். தேர்வில் 7ஏ பெற்றவர்களே தமிழ் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய விதியால் தமிழ் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை குறையும். 7ஏ பெற்ற மாணவர்கள் தமிழ் ஆசிரியர் ஆவதை விட வேறு துறைகளுக்குப் போகவே விரும்புவர். எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக் குறையால் தமிழ்ப் பள்ளிகள் தரம் குன்றி பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு இயற்கை மரணம் அடையலாம்.

 

அறிவுத்திறன், சிந்தனைத் திறன், தலைமைத்துவப் பண்பு, பன்மொழித்திறன், நன்னெறியும் ஆன்மீகமும், தேசிய ஒருமைப்பாடு ஆகிய அறுமுனை இலக்கைக் கொண்ட இப்பெருந்திட்டம் இவற்றை அடைவதற்கான செயல்முறைகளை அழுத்தமாக வரையறை செய்யவில்லை. கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்விகளைத் திருத்தும் செயற் கூறுகளை வலுவுடன் முன் வைக்கவில்லை.

 

கல்வி அமைச்சர் இதனை அறிவித்தவுடன் பூமிபுத்ராக்களுக்கான சிறப்பு வணிக வாய்ப்புகள் குறித்த மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் அறிவிக்கிறார். இரண்டு அறிவிப்புகளையும் அடுத்து வரப் போகும் அம்னோ பேராளர் மாநாட்டுடன் இணைத்துச் சிந்தித்தால் வழக்கம் போல அரசியல் சாரத்துடன் தயாரிக்கப்பட்டதாகவே இக்கல்விப் பெருந்திட்டத்தை வகைப்படுத்த முடிகிறது. கடந்த காலங்களில் தோல்வியடைந்த திட்டங்களால் உருவாக்கப்பட்ட தரங் குறைந்த மாணவர்கள் அணியே இனியும் தொடரும்.

 

எனவேதான் இக்கல்விப் பெருந்திட்டம் அறிவுப் பண்பாட்டுக்கு அப்பால் திட்டமிட்ட அரசியல் தளத்தில் நடக்கிறதோ என்ற அச்சத்தைக் கல்வியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுப் பிழைகள் தொடரும்.