நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதில் முதல்படமாக ‘‘பாண்டியநாடு’’ எனும் படத்தை தயாரித்து, அதில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார். விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி, சுசீந்திரனின் அப்பா நல்லு, இமானின் அப்பா டேவிட் ஆகிய மூவரும் ‘‘பாண்டியநாடு’’ படத்தின் இசையை வெளியிட்டனர்.
பின்னர் விழாவில் பேசிய விஷால், இயக்குநர் திரு மூலமாகத்தான், சுசீந்திரன் கிட்ட பாண்டியநாடு படத்தின் கதையை கேட்டேன். பிறகுதான் ஒருநாள் இரவு 12மணிக்கு திடீரென தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு பண்ணி இந்த படத்தை தயாரித்தேன். இந்த நேரத்தில் எங்க அப்பாவுக்கு நான் நன்றி சொல்கிறேன். அவர் எப்போதும் அடிக்கடி என்னிடம் சொல்வது பொறுமை வேண்டும், தோல்வி வந்தாலும் அதை தாங்கி கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பது தான். அவர் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் இந்த பாண்டியநாடு படத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன்.
பாண்டியநாடு படம் ஆரம்பிக்கும்போது என்னிடம் ஒரு பைசா கிடையாது. என் நண்பர் அழகர் கொஞ்சம் பணம் கொடுத்தார், பிறகு அன்பு கொஞ்சம் பண உதவி செய்தார். பிறகு தான் சுசீந்திரனின் மூளையை வைத்து இந்தபடத்தை நான் தயாரிக்கலாம் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. என் கேரியரில் பாண்டியநாடு படம் ரொம்ப முக்கியமானது. பொதுவாக ஹீரோக்கள் எல்லோரும் ஹீரோயினத்தான் லவ் பண்ணுவாங்க, ஆனால் இந்தப்படத்தில் என் அப்பாவாக நடித்துள்ள பாரதிராஜாவைத்தான் நான் லவ் பண்ணினேன். ஒரு பெரிய இயக்குநரான அவரை அருகில் இருந்து ரசித்தேன். பாண்டியநாடு படத்தில் நான் திக்கி திக்கி பேசும் கேரக்டரில் நடித்ததால் என்னவோ இப்போது இங்கும் நான் திக்கி திக்கி பேசுகிறேன்.
சினிமாவில் ஒரு உதவியாளராக என் பயணத்தை தொடங்கினேன். முதன்முதலில் அர்ஜூன் சார்கிட்ட தான் உதவி இயக்குநராக பணியாற்ற வரிசையில் நின்றேன். அவர் என்னை தனது உதவியாளராக சேர்த்து கொள்வாரா இல்லையோ என்று தயங்கி தயங்கி நின்றேன். பிறகு உதவி இயக்குநராக பணியாற்றினேன், செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக நடிச்சு, இப்போ பாண்டியநாடு படத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராக உங்கள் முன்னாடி நிற்கிறேன். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன்.
மத கஜ ராஜா படத்தின் அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்தப்படத்திற்காக எல்லா வேலைகளையும் நான் இழுத்து போட்டு பார்த்தேன், ஆனால் கடைசியில் சில பல பிரச்னைகளால் அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விட்டது. ஒரு இயக்குநர் உடைய கஷ்டம் என்னவென்று எனக்கு தெரியும். அதனால் என் தயாரிப்பு நிறுவனத்தில் நிறைய புதுமுகங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு தர போகிறேன். நான் இவ்வளவுதூரம் வருவதற்கு எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினீங்க, அதேப்போல் பாண்டியநாடு படத்திற்கும் சப்போர்ட் பண்ணுங்க என்றார்.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, நடிகை குஷ்பு, ரம்யா நம்பீசன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், ஞானவேல் ராஜா, டைரக்டர்கள் சமுத்திரகனி, பாண்டிராஜ், சீனுராமசாமி ஆகியோருடன் ஹீரோ விஷால், ஹீரோயின் லட்சுமி மேனன், டைரக்டர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.