பொதுமக்களுக்கு, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே மோட்டார் சைக்கிள் பயணம் மெற்கொள்கிறேன் என்று அஜீத் குமார் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு அஜீத் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு பயணிக்கும் போது அவர் ஹெல்மெட் உள்பட அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்கிறார். விழிப்புணர்விற்காகவே அவர் பி.எம்.டபிள்யூ கே1300எஸ் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
இதே பைக்கில் அவர், கடந்த மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் அஜீத் குமார் தற்போது மீண்டும் ஒரு விழிப்புணர்வு பயணம் செய்திருக்கிறார். இந்த முறை அவர் தனது பயணத்தை மராட்டிய மாநிலம் புனே – சென்னைக்கும் இடையே மேற்கொண்டிருக்கிறார். அவர், 1100 கிலோ மீட்டர் தூரத்தை 16 மணி நேரப் பயணத்தில் கடந்தார்.
இந்த மோட்டார் பைக் பயணம் குறித்து அஜீத் கூறும்போது, “பைக்கை போன்ற டூ-வீலர் வாகனங்களை ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கும் பெரும்பாலானோர் மரணம் அடைய நேரிடுகிறது. பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நான் அடிக்கடி மோட்டார் சைக்கிள் பயணம் மெற்கொள்கிறேன்.
நம் நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை பெரும்பாலானோர் சரியாக கடைப்பிடிப்பதில்லை. எல்லோரும் போக்குவரது விதிமுறைகளை சரியாக கடைபிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதே என் விருப்பமும் வேண்டுகோளும்’ என்றார்.