நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!

santhanamஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி புகார் செய்துள்ளது.

அதில், ஆல் இல் ஆல் அழகுராஜா படத்தின் ட்ரைலரில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை நக்கலடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க, அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார்.

பின்னர் கார்த்தி சிகரெட் வேண்டாம் என சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இது அந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பது போலுள்ளதாக தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக் கூட்டணி தெரிவித்துள்ளது.

மேலும் சந்தானத்துக்கு எதிராக எழுத்துப்பூர்வ மனுவையும் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் எஸ் சிரில் அலெக்சாண்டர் கூறுகையில், புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான மிக வெற்றிகரமான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார்.

குட்காவுக்கு எதிரான விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது குரலை இமிடேட் செய்வது சரியா? புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது கேவலமான செயல் என்பதைப் போல சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது.

மேலும் இந்த காட்சி நிச்சயம் நீக்கப்பட வேண்டும். புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தானத்தின் இந்த கிண்டல் பாதித்துள்ளது என்றும் இது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிரானதும் எனவும் கூறியுள்ளார்.