ரஜினிக்குப் பிறகு சூர்யா படம்தான் குடும்பத்தோடு பார்க்கிற படம்: இயக்குனர் அமீர்

surya-Aரஜினிகாந்த்துக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்கற படம் சூர்யாவோட படம்தான் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

‘ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு ஆச்சர்ய சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று, அடுத்த வருடம் கௌதம் மேனன் படத்தில் நடிப்பேன் என்று சூர்யா சூசகமாக கூறியது, மற்றொன்று ‘பருத்தி வீரன்’ பட பிரச்னையால் பிரிந்திருந்த இயக்குனர் அமீரும், சூர்யாவும் அருகருகே அமர்ந்தது. அதோடு நில்லாமல் விழா மேடையில் அமீர், சூர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டார். இது விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

விழாவில் அமீர் பேசியதாவது., “இன்று நான் இந்த விழாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நடிகர் சூர்யா தான். அவர் தான் என்னை இயக்குனரா நம்பி முதன் முதலாக இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

12 வருடங்களுக்குப் பிறகு அதை இப்போது ஏன் இந்த மேடையில் சொல்கிறேன் என்றால், ‘மௌனம் பேசியதே’ படத்திற்குப் பிறகு நாங்கள் இது மாதிரி மேடைகளில் சந்தித்ததேயில்லை என்பது தான் உண்மை! எங்களுக்குள் வழக்கமான சந்திப்போ, பேச்சோ எப்போதுமே இருந்தது கிடையாது. அவர் நடித்த ‘நந்தா’ பட ரிலீசுக்குப் பிறகு நாங்கள் ஊர் ஊராக சென்றிருந்தோம்.

தமிழ்நாட்டுல ரஜினிகாந்த் சாருக்கு அப்புறம் மக்கள் குடும்பத்தோட போய் பார்க்கற படம் சூர்யாவோட படம்தான். அதை நானே பார்த்திருக்கிறேன். அதை சூர்யா எந்த அளவுக்கு கவனிச்சிருக்காருன்னு தெரியலை.

ஆனால், அவரு என்னடான்னா ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ன்னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள்ல நடிச்சிட்டிருக்காரு. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சூர்யாவை எப்படி பார்க்கிறன்னா அவரை ஒரு ‘அமீர்கான்’ மாதிரி பார்க்கிறேன்.

ஏன்னா, அமீர்கான் பண்ற படங்கள் மாதிரி இங்க சூர்யாவாலதான் பண்ண முடியும். அதனால, என்னுடைய முதல் பட கதாநாயகன் கிட்ட, என் நண்பன் கிட்ட நான் கேட்டுக்கிறது என்னன்னா, நீங்க குடும்பக் கதைகள்லயும் நடிக்கணும். இவ்வளவு நான் சொன்னதும், உடனே என் படத்துல அவர் நடிக்கிறாரான்னு கேட்டுடாதீங்க.

அதை மாதிரி படங்கள் பார்க்கிறதுக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க. கொடுக்கிறதுக்குத்தான் ஆளில்லை என்றார்.