திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு விவகாரம்: 28-இல் முதல்வரை சந்திக்கிறது பெப்ஸி

c21dfefsசினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை வரும் 28-ஆம் தேதி சந்திக்க உள்ளதாக பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர் தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரணியாகச் சென்று முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: “பெப்ஸி’ அமைப்பில் 23 தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை மூன்றாண்டுகளாக இழுபறியில் உள்ளது. அந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து “பெப்ஸி’ தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதல்வரை வரும் 28-ஆம் தேதி “பெப்ஸி’யின் அனைத்து அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களும் பேரணியாக சென்று சந்திக்க உள்ளோம்.

இந்த சந்திப்பின்போது, திருட்டு வி.சி.டி. விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்; மற்ற மாநிலங்களுக்கு முன் உதராணமாக முதல் முறையாக திரைப்படத் துறைக்கு வீடு கட்ட தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் சில இடர்பாடுகளால் வீடு கட்ட முடியாமல் இருக்கும் நிலையை மாற்றுவது குறித்தும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

தவறான முறையில் தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவராக உள்ள வி.சி.குகநாதன் உள்ளிட்ட குழுவினரை கலைத்துவிட்டு மீண்டும் அத்தேர்தலை முறையாக நடத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெப்ஸி அமைப்பால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சம்மேளனத்தில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கொடுத்து வரும் தொல்லைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

சம்மேளன நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்; பெப்ஸி அமைப்பின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக் கூடிய திரைப்படத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம் என அமீர் தெரிவித்தார்.