திரைப்பட இயக்குனர் மீது ஜெயலலிதா வழக்கு

Jayalalithaa2திரைப்பட இயக்குனர் மனுக்கண்ணன் மற்றும் நக்கீரன் கோபால் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்எல் ஜெகன் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கடந்த 19ம் திகதி வெளிவந்த நக்கீரன் இதழில் ‘லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு லஞ்சம் கேட்கும் மந்திரி’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்தது.

அதில் அங்குசம் திரைப்படத்தின் இயக்குனர் மனுக் கண்ணனின் பேட்டி வெளிவந்தது. லஞ்சத்தை எதிர்த்து தான் தயாரித்துள்ள திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்க அமைச்சர் அலுவலக பிஏ லஞ்சம் கேட்டார் என்றும் மேலும் பல தகவல்களையும் கூறியுள்ளார்.

இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எனவே எந்த ஆதாரமும் இல்லாமல் செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், செய்தியாளர் ஜேஆர்டி, திரைப்பட இயக்குனர் மனுக்கண்ணன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.