மே 5க்கு முன்னால், பின்னால்

aru nagappan-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 27, 2013.

 

மே 5, 13ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒரே மலேசியா முழக்கம் காதைக் கிழித்தது. பிரதமர் நம்பிக்கை என்ற தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு கூட்டங்களில் மக்களைச் சந்தித்தார். வாக்குறுதிகளை வாரி வழங்கினார். ‘நம்புங்கள், ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கெஞ்சினார். தேர்தல் நெருங்கும் போது ஒரே மலேசியா மக்கள் உதவி (பிரிம்) 500 ரிங்கிட் வழங்கினார்.

 

கோயில்களுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் கல்வி சார்ந்த பொது அமைப்புகளுக்கும் சமய அமைப்புகளுக்கும் கூட லட்சங்களை வாரி வழங்கினார். நன்கொடை வாங்கிக் கொள்ள பொது அமைப்புகளைத் திரட்டிப் பட்டியல் தயாரிக்கும் ஏஜண்டுகள் ஊர் வாரியாக வேலை செய்தனர். தமிழ்ப் பள்ளிகளுக்கு அவசர அவசரமாக பூமி பூசைகள் செய்யப்பட்டன. அடிக்கல் நாட்டப்பட்டன. தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த, அதற்கான ஆய்வுகளைச் செய்யத் தனி அதிகாரி பிரதமர் துறையில் அமர்த்தப்பட்டார்.

 

மாணவர்களுக்கு மடிக்கணினி, கைப்பேசி வாங்குவதற்கு உதவித்தொகை, புத்தகம் வாங்கப் பணம் இப்படி நாள்தோறும் கடையேழு வள்ளல்களும் ஒரே பிறப்பாக வந்தது போல பிரதமர் வாரி வாரி வழங்கினார். ஒரே மலேசியா மளிகைக் கடை, மருத்துவ நிலையம், உணவுக் கடை என்று புதுப் புது வியூகங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆட்டுக்கறி, கோழிக்கறி சோற்றுப் பொட்டலங்கள், அரிசி முதலிய மளிகைச் சாமான்கள் வழங்கும் சிறப்புக் கூட்டங்கள்.  நாள்தோறும் ‘ராக்யட் டிடஹுலுகான், மக்களுக்கே முதலிடம் என்று வாக்காளர்கள் சில நாள் மகாராஜாக்களாக ஆக்கப்பட்டனர்.

 

ஆட்சிக்கு வந்தால் நெடுஞ்சாலை கட்டணம் குறையும், பெட்ரோல் விலை குறையும், இலவச உயர்கல்வி வழங்கப்படும், பிடிபிடிஎன் கல்விக்கடன் நீக்கப்படும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் சொன்னபோது அவற்றுக்கெல்லாம் பதிலே சொல்லாமல் சில்லறைகளை வாரி இறைப்பதில் மட்டும் பிரதமர் குறியாக இருந்தார். தேர்தல் ஆணையம் அவர்கள் கைவரிசையை ஒரு பக்கம் காட்டிக் கொண்டிருந்தபோது பிரதமர் இதற்கு முன் எந்தப் பிரதமரும் அலையாத அலைச்சல் அலைந்தார்.

 

தேர்தலுக்குத் தேர்தல் புது மழை கண்ட வாழை மரத்தைப் போல சிலிர்த்துக் கொள்ளும் ஐ.பி.எப் இப்போதும் திரண்டு வந்தது. 15,000 பேர் கொண்ட கூட்டம் கூடியது. பாரிசானில் இணைய வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாகப் போராடும் அந்தக் கட்சிக்குக் கண்டிப்பாகப் பரிசீலிக்கப்படும் என்று மீண்டும் வாக்குறுதி வழங்கப்பட்டது. அவர்களும் வழக்கம் போல செஞ்சட்டைப் படையாகி பாரிசான் கொடிகளில் கோபுரம் கட்டும் வேலைகளில் ஈடுபட்டனர்.

 

இந்தியர்களுக்கு வாக்குறுதி மட்டும் போதாது, வாக்குறுதிகளை கையெழுத்திட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்று வேதமூர்த்தி பாக்காதான், பாரிசான் என்று இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தினார். உண்ணாவிரதம் இருந்தார். பாக்காதான் பழைய பாணியில் வாக்குறுதி மட்டும் கொடுத்தது. கையெழுத்திட முன் வரவில்லை. பிரதமர் இந்தியர் வாக்குகளில் தமது வெற்றிக் கனி மறைந்திருப்பதாக நம்பியதால் கையெழுத்திட்டதோடு பிரதமர் துறையில் இந்தியர் நல மேம்பாட்டுக்காகத் துறை ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறினார்.

 

மே 5க்குப் பின்னால்

 

அன்று நள்ளிரவுக்கு முன்பே ஒரே மலேசியாவின் பிரதமர் என்ற நஜிப்பின் முகமூடி கிழிந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 133 தொகுதிகள் பாரிசான் (47.38% வாக்குகள்) 89 தொகுதிகள் பாக்காதான் (50.87% வாக்குகள்) என்ற முடிவில் நஜிப் வெற்றி பெற்றும் சீனர்களின் ஆதரவு கிடைக்காத விரக்தியில் ‘சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?’ என்று கேட்ட ஒரு கேள்வியில் நஜிப்பின் இனவாத முகம் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

தேர்தலுக்கு முன்னால் காலியான கஜானாவை நிரப்ப வேண்டிய கட்டாயம். பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை லிட்டருக்கு 25 காசு குறைப்பு. சீனிக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை கிலோவுக்கு 34 காசு குறைப்பு. பெட்ரோல் விலை உயர்வால்  எல்லாப் பொருள்களும் விலை உயர்வு கண்டுள்ளன. சீனி விலை உயர்வால் அதனோடு தொடர்புடைய எல்லாப் பொருள்களின் விலையும் உயரும்.

 

சீனியைக் குறைத்துச் சாப்பிட்டால் தாம்பத்திய வீரியம் அதிகரிக்கும் என்பது நஜிப்பின் ஆலோசனை. அவரைப் போன்ற பணக்காரர்களுக்குத் தாம்பத்தியமும் அதன் வீரியமும் மிக முக்கியம். ஆனால் நம்மைப் போன்ற ஏழைகளுக்கு விலைவாசி ஏற்றத்தால் உணவுக்கும் வீட்டுக்கும் பிள்ளைகளின் கல்விக்கும் மருந்துக்கும் அல்லாடும்போது தாம்பத்தியம் ஒரு கேடா என்ற நிலை. விலை ஏற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இப்படி ஒரு சமாதானம் சொல்லுகிறவரைப் பிரதமராகப் பெற்றிருப்பது மலேசியாவின் சாபக்கேடு!

 

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவித்தொகை கிடைக்கவில்லை என்பதைச் சொல்லுவதற்கு அவர்களின் தலைவர்  விண்ணப்பத்தை வாயில் கெளவிக்கொண்டு மாடிப் படிகளில் தவழ்ந்து சென்றபோது ‘ராக்யாட் டிடாஹுலுகான்’ என்ற சுலோகம் அப்பட்டமான பொய் என்பதும் உறுதியானது. மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய 300 ரிங்கிட் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இங்கும் இன ஒதுக்கல்!

 

மீண்டும் முதலாளித்துவம் தோட்டங்களைக் காலி செய்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் மாற்று வீடு கேட்டு மறியலில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கிக் கொண்ட அவலம். ஊழல் குத்தகையாளர்கள் கட்டிய வீடுகளில் ஒழுகல், உடைசல். உடைமையாளர்கள் கோரிக்கை. அதிகாரிகளின் அலட்சியம்.

 

வேதமூர்த்திக்கு செனட்டர் பதவி, தொடர்ந்து பிரதமர் துறையில் துணையமைச்சர் பதவி. பதவி மட்டும்தான். இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துப் பேச்சு மூச்சு இல்லை. பதவி விலகப் போகிறேன் என்று வேதமூர்த்தி அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார். அவர் பதவியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன, மே 5க்கு முன்னால் பசார் மாலாமில், கடைத்தெருக்களில் ஒவ்வொருவராகக் கட்டிப் பிடித்து நம்பிக்கை, நம்பிக்கை என்று சொன்ன பிரதமர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் ஆரோகணித்திருப்பார்.

 

தேர்தலுக்கு முன்னால் ஒரே மலேசியாவின் கதாநாயகனாக இருந்த பிரதமர் இப்போது அதே ஒரே மலேசியாவின் வில்லனாக மாறியிருக்கிறார். தேர்தலுக்கு முன்னும் பின்னும் இந்த அளவுக்கு முகம் மாறிய முதல் பிரதமர் நஜிப்தான்.