தென் இந்திய நடிகையாக இருந்து தற்போது அரசியலில் கால் பதித்திருக்கும் திவ்யா ஸ்பந்தனா தான் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என யாரிடமும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழில், குத்து, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா.
சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தெரிவானார்.
தேர்தலுக்கு முன்னர் இவர் நீர்டோஸ், ஆர்யன், தில் கா ராஜா மேலும் ஒரு பெயரிடப்படாத படமென 4 கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது அரசியலில் கால் பதித்துவிட்டதால் நடிப்பதை விட்டுவிடுவார் என்றும் ஏற்கனவே பாதியில் நிற்கும் படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் படப்பிடிப்பு முடியாமல் பாதியில் நிற்கும் நீர்டோஸ் படத்தின் தயாரிப்பாளர், நாயகன் மற்றும் இயக்குனர் ஆகியோர் திவ்யா ஸ்பந்தனா மீது புகார் தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து திவ்யா கூறுகையில், நான் நடிக்கபோவதில்லை என யாரிடமும் சொல்லவில்லை. பாதியில் நிற்கும் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க நான் தயாராக உள்ளேன்.
நீர்டோஸ் படக்குழுவினர் தான் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் இது தொடர்பாக அவர்கள் எனது மேலாளரிடம் பேசியுள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் படப்பிடிப்புக்கு தேவையான திகதிகளை நான் அளித்துள்ளேன். நாங்கள் முன்னதாக அளித்த திகதியில் அவர்கள் எதையும் செய்யாமல் தற்போது இவ்வாறு தவறாக கூறி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.