பாண்டிய நாடு………..(விமர்சனம்)

pandiyanaduமதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்… என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.

அமைச்சர் (மத்திய அமைச்சரா…? மாநில அமைச்சரா…?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.

இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!

டீச்சர் பாப்பா – லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!

பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் – சூரி, சோமசுந்தரம் – நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் – பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் – சூப்பரிந்திரன்!

ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு – பலே நாடு என சொல்ல வைக்கின்றன!