உமது மகளாக, உமது இன மக்களாக இருந்தால்…?

Tunku-Najib with Rajapakse-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 9, 2013.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு பெண்ணைக் கடத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு கூறுவதற்கு முன்பு தம் முன் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து, “உங்கள் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?”, என்று கேட்ட பின்னர் அவர், “அது உங்கள் ஆயுள் முழுவதும் ஆறாத  வடுவை ஏற்படுத்தி விடும்”, என்று கூறினார்.

ஒரு பெண்ணைக் கடத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நால்வருக்கும் “மரண தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பாக அமையும்” என்று கூறி அந்த நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார்.

இக்கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு “மிகுந்த அச்சத்தையும் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமின்றி அத்தம்பதியரின் குடும்பத்தினரும் இதனால் மனோரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்”, என்று ஒரு பெண்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அந்நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

isaipriyaஅதே கேள்வியை ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களைக் கொன்று குவித்த சிறீ லங்கா அரசின் தலைவருக்கு காமன்வெல்த் நாடுகளின் தலைவராக மகுடம் சூட்ட ஆதரவு அளித்து அவ்விழாவில் பங்கேற்கவிருக்கும் மலேசிய பிரதமர் நஜிப்பிடம் கேட்கிறோம்: சிறீலங்காவில் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர் உமது மகளாக அல்லது மனைவியாக இருந்தால், நீர் அந்தக் கொடியவனை தலைவராக ஏற்றுக்கொள்வீரா? அந்நாட்டில் இவ்வாறு கொல்லப்பட்ட பெண்கள் உமது இனப் பெண்களாக இருந்தால், நீர் அக்கொடிய அரக்கனை தலைவராக ஏற்றுக்கொள்வீரா?

ஆண்டவனாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணை அப்பெண்ணின் அனுமதியின்றி தொடக் கூடாது. துயில் உரிந்தால், உன் தொடை நொருக்கப்படும். பீமன் செய்து காட்டினான். அதுதான் தலைவனுக்கு அழகு. ஆனால், உலகம் கண்ட அரக்கர்களில் மிகக் கொடிய அரக்கனுடன் உறவாடச் செல்கிறார் மலேசிய பிரதமர் நஜிப்!.

ஒரு நாடு இலட்சக்கணக்கான அதன் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்நாட்டின் ஆயிரக்கணக்கான பெண்கள் உலக வரலாறு கண்டிராத வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொடுமைகளை இழைத்தது அந்நாட்டு சாதாரண மக்கள் அல்ல. அந்நாட்டு இராணுவப் படையினர் பெண்களை கற்பழித்தனர், கொன்றனர். அந்நாட்டு முப்படைகளின் தளபதியான அதிபர் இக்கொடூரச் செயல்களைத் தடுத்து நிறுத்தவில்லை. புன்னகை பூத்தார் அந்த அதிபர்.. அவரின் சகோதரர்கள் இக்கொடுமைகளை ஊக்குவித்தனர். “கற்பழியுங்கள். இந்துமாக் கடலை சிவப்பாக்குங்கள் என்று அக்கொடியவர்கள் முழங்கினர்.

அந்நாட்டு இனவெறியர்களின் கொடூரச் செயல்களை உலக மக்கள் கண்ணாரக் கண்டனர். கண்டனம் தெரிவித்தனர். காலம் கடந்த பின்னராவது ஐக்கிய நாட்டு சபை நிபுணர்கள் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. ஐநாவின் மனித உரிமை மன்றம் ஆய்வுகளை மேற்கொண்டது. தனிப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளும் தனி மனிதர்களும் மேற்கொண்ட ஆய்வின் வழி அந்நாட்டு தலைவர்களும் இராணுவப் படையினரும் புரிந்த அட்டூழியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. அந்நாட்டு தலைவர்களும் இராணுவப் படையினரும் போர்க் குற்றம் புரிந்துள்ளனர். அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நமது நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரயிஸ் யாத்தின் இவ்விவகாரம் சம்பந்தமாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருடன் தொடர்பு கொண்டு இரண்டு வாரங்களில் பதில் கொடுப்பதாக கூறியிருந்தார். இன்னொருவர், ஜாபார், “பாலஸ்தீனம் ஓகே, சிறீ லங்கா நோட் ஓகே” என்றார்.

தனது நாட்டின் ஆயிரக்கணக்கான பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கற்பழித்து கொன்றதற்கு பொறுப்பான சிறீ லங்கா  அதிபரை 54 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்புக்குத் தலைவராக்க மலேசிய இணங்கியிருப்பது அந்நாட்டின் ஆயுதப் படையிரும் அரசியல் தலைவர்களும் புரிந்த மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதாகும்.

காமன்வெல்த் அமைப்பு மனித உரிமை, ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள், சட்ட ஆளுமை போன்ற பல்வேறு கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பியம் பெறுவதற்கு மனித உரிமை கோட்பாடுகள் பின்பற்றப்படுவது மிக அவசியமானதாகும்.

காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் பிரகடனங்களின் அடிப்படைக் கோட்பாடு மனித உரிமைகள் ஆகும்.

இக்கோட்பாடு சிங்கப்பூர் பிரகடனம் 1971 இல் முக்கியத்துவம் பெருகிறது:

We believe in the liberty of the individual under the law, in equal rights for all citizens regardless of gender, race, colour, creed or political belief, and in the individual’s inalienable right to participate by means of free and democratic political processes in framing the society in which he or she lives;

We recognise racial prejudice and intolerance as a dangerous sickness and a threat to healthy

development, and racial discrimination as an unmitigated evil;

We oppose all forms of racial oppression, and we are committed to the principles of human dignity and equality.

இக்கோட்பாடு 1991 ஆம் ஆண்டு ஹராரே காமன்வெல்த் பிரகடனத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.:

1.The protection and promotion of the fundamental political values of the Commonwealth:

2. Democracy, democratic processes and institutions which reflect national circumstances, the rule of law and the independence of the judiciary, just and honest government;

3. Fundamental human rights, including equal rights and opportunities for all citizens regardless of race, colour, creed or political belief;

4.Equality for women, so that they may exercise their full and equal rights.

காமன்வெல்த் அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள 54 நாடுகளும் மேற்கூறப்பட்ட கோட்பாடுகளை அமல்படுத்த வேண்டும். அவை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் கடப்பாடு அந்த அமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15-17 இல் சிறீ லங்காவில் நடைபெரும் காமன்வெல்த் மாநாட்டில் சிறீலங்க அதிபர் காமன்வெல்த் மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டு அவர் அப்பதவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார். அந்த இரண்டு ஆண்டுகளில் காமன்வெல்த் நாடுகளில் மனித உரிமைகள் வளர்ந்து மிளிர்வதை அவர் உறுதி செய்வார். இதை நாம் நம்ப வேண்டும். இப்படி யாரேனும் கூறினால், அவரைப் போன்ற அயோக்கியர் வேறு எவரும் இந்த உலகில் இருக்க முடியாது.

நஜிப் இதனை நம்புவார். ஏனென்றால் அவர் இந்நாட்டின் நம்பிக்கை மன்னன். காமன்வெல்த் பிரகடனத்தை நஜிப் எந்த அளவுக்கு அமல்படுத்தியுள்ளார் என்று அவரிடம் கேட்க வேண்டும். கேட்டால், நாங்கள் 67 விழுக்காடு (இந்நாட்டு மக்கள் தொகையில்) என்று பதில் அளிப்பார்.

காமன்வெல்த்  தலைவர் என்ற முறையில் சிறீ லங்கா அதிபர் நமக்கும் தலைவராகிறார்! நமக்கு ஓர் அரக்கன் தலைவர்! இந்நிலைக்கு நமது நாட்டை தள்ளியுள்ள நஜிப் கண்டிக்கப்பட வேண்டும்.

2011 இல் தீண்டப்படாதவர் 2013 இல் வேண்டியவராகி விட்டார்

உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்த சிறீ லங்கா அரசின் மனித உரிமைகள் அத்துமீறல்கள் காரணமாக காமன்வெல் மாநாட்டை சிறீலங்காவில் 2011 இல் நடத்துவதற்கு சிறீ லங்கா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில் எப்படி அம்மாநாட்டை நடத்த மனித உரிமைகள் அத்துமீறல்களின் கோட்டையாக தொடர்ந்து இருந்து வரும் சிறீ லங்கா தகுதி பெற்றது?

இத்தகுதியைப் பெற சிறீ லங்கா அரசு எவ்வாறு அதற்கு எதிராகக் கூறப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை புனிதப்படுத்திக் கொண்டது என்று நமது நாட்டின் தலைவர் நஜிப் விளக்கமளிக்க வேண்டும்.

இரண்டே ஆண்டில், ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தி கொன்று குவித்த, எண்ணற்ற மனித உரிமை மீறல்களைப் புரிந்த, சிறீ லங்கா அரசு எப்படி புடம் போட்ட தங்கமாகி விட்டது என்பதை நஜிப் விளக்க வேண்டும்.

இந்த காமன்வெல்த் மாநாடு சிறீ லங்காவில் நடத்தப்பட விருப்பது, அதில் பங்கேற்பது போன்றவற்றை எல்லாம் விட முக்கியமானது அந்நாட்டின் அரக்கன் காமன்வெல்த் நாடுகள் அமைப்புக்குத் தலைமை ஏற்க இம்மாநாடு வழி வகுக்கிறது என்பதுதான்.

 

1najibபெண்களைக் கொடுமைப்படுத்தி கற்பழித்து கொன்று குவித்த அரக்கனுக்கு காமன்வெல்த் மாநாட்டின் தலைமைப் பீடம். அதற்குக் கைமாறாக, சிறீ லங்காவில் முதலீடு செய்வதற்கு இடம். இதுதான் சிறீ லங்காவின் வெற்றிக்கான சூட்சுமம்.

காமன்வெல்த் மாநாடு தொடங்குவதற்கு முன்னர் காமன்வெல்த் வாணிக கருத்தரங்கு சிறீ லங்காவில் நவம்பர் 13 இல் தொடங்குகிறது. மலேசியா அதில் முக்கிய பங்காற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? காசு பண்ண கொஞ்சம் இடம் கொடு என்ற மனப்பாங்கால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப், கதறல்களால் கவரப்படமாட்டார்.

தவறான முடிவால் தவறானவர்களை ஆட்சியில் அமர்த்தியதால் எப்படி தரம் தாழ்த்தப்பட்டு விட்டோம். சிந்திப்போமா?