கதை இல்லாமல் படம் எடுக்கும் பார்த்திபன்

parthiban201110_1வித்தகன் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பங்ஷன், ஜங்ஷன் என்று பிசியாக இருந்தார் பார்த்திபன். இப்போது “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம் (இதற்கு முன் டைரக்ட் செய்த படத்தில் இருந்துச்சாக்கும்னு மைண்ட் வாய்ஸ் கேக்குது). முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பார்த்திபன் நடிக்கவில்லை (அப்பாடா…). சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்தினார்.

அப்போது அவர் படத்தை பற்றி கூறும்போது ” கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம், இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேட்பாங்க. அப்படி கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்.

நல்லா யோசிச்சுப்பார்த்தா நாம ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரு எழுதின திரைக்கதையிலதான் நடிச்சிக்கிட்டிருக்கோம். இன்னொருத்தர் எழுதின வசனத்தைதான் பேசிக்கிட்டிருக்கோம். வாழ்க்கையில் அடுத்த நொடி, அடுத்த நிமிடம் நடக்குற விஷயங்கள்தான் கதையை உண்டாக்குது. இன்னும் சொல்லப்போனா வாழ்க்கையில கதைன்னு ஒண்ணு கிடையாது. எல்லாமே சம்பவங்கள்தான். சினிமாலதான் கதை இருக்கும். மதன் கார்க்கி எழுதின “காற்றில் கதை இருக்கு…” என்ற பாட்டுதான் படத்தோட புரமோஷன் பாட்டு. அதை கேட்டீங்கன்னா படம் என்னென்னு தெரிஞ்சுடும். இது சவாலான முயற்சிதான்” என்றார்.

ஒரு சின்ன குறிப்பு: பூஜை நடந்த மறுநாள் மீடியாக்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் பார்த்திபன். அதில் அவர் “தங்கள் முன்னிலையில் என் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் நல் துவக்கமாக்கியதில் மகிழ்ச்சி, வரவேற்பு, உபசரிப்பு மற்றும் என் பேச்சு இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். தொடரும் தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மரியாதைக்கான நன்றியா, இல்லை ஏதாவது புதுமையா? என்றுதான் தெரியவில்லை.