குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெவிதம்பி என்ற ஜஸ்டின் ரவி. சினிமா டைரக்டர். சமீபத்தில் வாச்சாத்தி என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.
இவருக்கும், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜஸ்டின் ரவி சென்னை சென்று விட்டார்.
மேலும் ஷிபாவிடமிருந்து நகை, பணத்தை வாங்கி சென்றதாகவும், அதன் பிறகு அவர், ஷிபாவின் குடும்பத் தேவைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக ஷிபா ஜஸ்டின் ரவியிடம் கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஷிபா ஜஸ்டின் ரவியின் பின்னணி குறித்து விசாரித்தார்.
அப்போது ஜஸ்டின் ரவி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. எனவே அவர், இதுபற்றி குழித்துறை அனைத்து மகளிர் பொலிஸில் புகார் செய்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்னையில் சினிமா இயக்குனராக இருக்கும் ஜஸ்டின் ரவிக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 7 வயதில் குழந்தை உள்ளது. குடும்பச் செலவுக்கு ஜஸ்டின் ரவி பணம் தருவதில்லை. இதற்கான காரணம் பற்றி விசாரித்தப்போது அவர் ஏற்கனவே பாறசாலையைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.
மேலும் மார்த்தாண்டத்தை அடுத்த சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
மூன்றாவதாக திருவனந்தபுரம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
நான்காவதாக திருவனந்தபுரம் புஜபுரையைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.
ஐந்தாவதாக என்னை மணம் முடித்து ஏமாற்றி விட்டார். திருமணம் செய்த அனைவரிடமிருந்தும் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து இருக்கிறார்.
இப்போது மீண்டும் ஒரு புதிய சினிமா கம்பெனி தொடங்கி சினிமாவில் நடிக்க புதுமுக பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அவரிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் மனு மீது விசாரணை நடத்தியதில் ஜஸ்டின் ரவி ஏற்கனவே திருமணம் செய்த ஷைலஜா, அனிதா ஆகியோரின் புகைப் படங்கள் கிடைத்தது.
மேலும் அனிதாவும், தான் ஏமாற்றப்பட்டது பற்றி தனியாக குழித்துறை பொலிஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ஜஸ்டின் ரவியை பிடித்து விசாரிக்க பொலிஸார் முடிவு செய்தனர். இதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கியபோது, ஜஸ்டின் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து நேற்று அதிகாலை குழித்துறைக்கு காரில் வருவது தெரிய வந்தது.
உடனே உஷாரான போலீசார் குமரி மாவட்ட எல்லையான களியக்கா விளை சோதனை சாவடியில் ஜஸ்டின் ரவி வந்த காரை தடுத்து நிறுத்தி அவரை பிடித்தனர்.
பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.