பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நடிகை அஞ்சலி கைதாக வாய்ப்பு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்தார்.
வளசரவாக்கத்தில் சித்தி பாரதி தேவியுடன் தங்கியிருந்து படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலி வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். பின்னர் சென்னையில் உள்ள பத்திரிகை நிரூபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இயக்குனர் களஞ்சியம், சித்தி பாரதி தேவி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இருவரும் சேர்ந்து என்னை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு களஞ்சியம்தான் பொறுப்பு என்றும் அஞ்சலி கூறியிருந்தார்.
இதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்த களஞ்சியம், அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அஞ்சலிக்கு கடந்த மாதம் 29ம் திகதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகை அஞ்சலி தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜெகனாப்பேட்டை என்ற இடத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதி, ராசுல் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும்.
இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் நகல் ராசுல் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அஞ்சலி நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே விரைவில் அவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.