சித்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி நடிகை அஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னையிலிருந்து ஹைதராபாதுக்கு நான் சென்ற பிறகு இயக்குநர் களஞ்சியத்தின் தூண்டுதலின் பேரில் சித்தி பாரதிதேவி, சூரிபாபு மற்றும் அவர்களுடைய மகன்கள் சதீஷ், சந்திரபாரத் ஆகியோர் எனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, அந்த வீட்டுக்கு நான் வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர்.
எனது 50 சவரன் நகை உள்பட உடைமைகள் அனைத்தையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இது குறித்து சென்னை போலீஸ் ஆணையரிடம் கடந்த செப்டம்பார் மாதம் 22 -ஆம் தேதி புகார் அளித்தேன். அந்தப் புகார் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், எனது சித்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீது நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.