500 பாடகர்களை பாடவைத்து 1330 திருக்குறள்களையும் பாடலாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
அஜீத் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர், சமீப காலமாக எந்த படத்திற்கும் இசையமைக்காமல் இருந்தார்.
இது பற்றி விசாரித்ததில் தனக்கு கிடைத்த இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி இருக்கிறார் பரத்வாஜ். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளுக்கு மூன்று விதமாக இசையமைத்து இருக்கிறார்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதற்காக உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் பாடகர்களை பாட வைத்திருப்பதுதான். மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருகிறார்கள். இது குறித்து பரத்வாஜிடம் கேட்டால், “எந்த தலைமுறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. அதை வெறும் வார்த்தையால் சொல்வதைவிட, இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்.
இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன். ஜனவரி 17ஆம் தேதி அன்று திருவள்ளுவர் தினம் அன்று இதை வெளியிட இருக்கிறேன்” என்கிறார் பரத்வாஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ‘அதிதி’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
உங்கள் முயற்சியினைக்கண்டு மிக்க ஆனந்தம் அடைகிறோம், ஐயா!
திருக்குறளை இன்னும் ஒரு படி மேல் கொண்டு செல்ல உங்கள் திருப்பனி மேல் ஓங்கட்டும். பணிவான வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்.