நஜிப்புக்கு நோபல் பரிசு!

pm boikot chogm4-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், நவம்பர்21, 2013.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் போர்க் குற்றவாளியாக வேண்டிய சிறீ லங்கா அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்து சிறீ லங்காவில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டார். அழைப்பு விடுப்பவர்கள் கொடியவர்களாக இருந்தாலும் அதற்கு மதிப்பு அளிக்கும் தலைவர் நஜிப் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சிறீ லங்கா மாநாட்டில் பிரதமர் நஜிப் பங்கேற்கக் கூடாது என்று அவர் வீசி எறியும்  அரிசிப் பொட்டலங்களைப் பொறுக்கிக்கொள்ளும் கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் தலைவர் ஜி. பழனிவேல் வேண்டிக்கொள்ள எண்ணியிருந்தும், பிரதமர் நஜிப் எதனையும் எவரையும் பொருட்படுத்தாமல் சிறீ லங்கா சென்றார். எது முக்கியமானது?: அழைப்பவரா அல்லது அழைப்பை தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்களா?

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது இன மக்களுக்கும் ராஜபக்சே போன்றவர்களால் துன்பம் ஏற்பட்டிருந்தாலும், அக்கொடுமைகளை இழைத்தவர்களிடமிருந்து அழைப்பு வந்தால், அதனை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உடையவர் நஜிப் என்பதை அவர் ராஜபக்சேயின் அழைப்புக்கு மதிப்பு அளித்து சிறீ லங்காவுக்கு சென்றதாக கூறியிருக்கும் விளக்கம் காட்டுகிறது என்றால் மிகையாகாது என்று கூறலாம்.

ராஜபக்சேயின் கொடூரத் தன்மைக்குமுன் பழனிவேல் எம்மாத்திரம்? பழனிவேல் கூட்டத்தினருக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

ராஜபக்சேயை பார்! ஓர் இனத்தையே படுகொலை செய்து காட்டியுள்ளார். அவரன்றோ தலைவர்!

ஆகவே, பிரதமர் நஜிப் மலேசிய நாட்டின் நன்மைக்காகப் பாடுபட வேண்டிய கட்டாயத்தின் பேரில் சிறீ லங்கா சென்றதாக கூறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் இயு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டதற்காக கடுமையாகச் சாடப்பட்டார். அதற்கு பதில் அளித்த குவான் இயு, I will trade with even the devils என்றார்.

லீ குவான் இயுவுக்கு இளைத்தவரா நமது பிரதமர் நஜிப்? இப்படி கேட்க நினைப்பதே தேசத் துரோகம் என்பார்கள். ஏனென்றால், நஜிப் இந்நாட்டு இந்தியர்களின் நம்பிக்கை மன்னன்!

இறுதியில், நம்பிக்கை மன்னன் நஜிப் இனப்படுகொலை மன்னன் ராஜபக்சேயை சந்தித்தார், கைகுலுக்கினார்.

ராஜபக்சேயின் இரத்தக்கறை படிந்த கையைக்குலுக்கியதும் பிரதமர் நஜிப்புக்கு ஞானம் பிறந்தது. மனித வரலாற்றில் எவராலும் கண்டுபிடிக்க இயலாத ஒன்றை கண்டுபிடித்தார். நஜிப்பின் இக்கண்டுபிடிப்பு அவரை நோபல் பரிசுக்கு தகுதியானவராக்கி விட்டது!

நஜிப்பின் கண்டுபிடிப்பு: “CHOGM is in Sri Lanka and (it’s) not CHOGM on Sri Lanka” (சிறீ லங்காவில் நடைபெற்றது காமன்வெல்த் மாநாடே தவிர சிறீ Tunku-Najib with Rajapakseலங்கா மீதான காமன்வெல்த் மாநாடல்ல). அற்புதமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் சிறீ லங்காவை நஜிப் காப்பாற்றி விட்டார். கைமாறு நிச்சயம் இருக்கும். இம்மாநாட்டில் கலந்து கொண்டதன் வழி மலேசியா பல நன்மைகளைப் பெரும் என்றும் நஜிப் கூறியுள்ளார்.

அப்படி என்றால், காமன்வெல்த்தில் உறுப்பியம் பெற்ற ஒரு நாடு காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளுக்கு, சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணாக நடந்துகொள்ளும் போது அது குறித்து விசாரிக்க, நடவடிக்கை எடுக்க அக்குறிப்பிட்ட நாடு மீது ஒரு சிறப்பு மாநாடு நடத்துவதுதான் முறையே தவிர, ஒரு வழக்கமான மாநாட்டில் அவ்வாறான நடவடிக்கை எடுப்பது முறையல்ல என்பது நஜிப்பின் கண்டுபிடிப்பாகத் தெரிகிறது.

அதுதான் நஜிப்பின் கண்டுபிடிப்பின் உட்பொருள் என்றால், நஜிப்புக்கு நோபல் பரிசு பெரும் வாய்ப்பு இல்லை என்று கூறலாம்.

தென்ஆப்ரிக்காவின் இன ஒதுக்கீடு கொள்கை உலக முழுவதும் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. தென்ஆப்ரிக்கா தற்போதைய காமன்வெல்த் அமைப்பில் பிரிட்டீஷ் காமன்வெல்த் ஆப் நேசன்ஸ் காலத்திலிருந்து உறுப்பினராக இருந்துள்ளது. காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுவடைந்து கொண்டிருந்தது.

1961 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற வழக்கமான காமன்வெல்த் மாநாட்டில், தென்ஆப்ரிக்கா மீதான சிறப்பு மாநாட்டில் அல்ல, அந்நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. அதனைச் செய்து முடித்தவர் துங்கு அப்துல் ரஹ்மான். அவர் மலாயாவின் பிரதமராக இருந்தவர் என்பது அநேகமாக நஜிப்பிற்கு தெரிந்திருக்கலாம்.

ஆகவே, நஜிப்பின் கண்டுபிடிப்பில் குறை இருப்பதால், அவர் நோபல் பரிசு சாத்தியம் இல்லை.

இந்த மதிநுட்பமானதாகத் தெரியும் கண்டுபிடிப்பு நஜிப் இம்மாநாட்டில் கலந்து கொண்டதை நியாயப்படுத்த உதவும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கலாம். அதனை இந்நாட்டு இந்தியர்கள் நம்புவார்கள் என்று நஜிப் நம்பியிருக்கலாம். ஆனால், நோபல் பரிசு வழங்குவதைத் தீர்மானிக்கும் குழு நம்பாது.

TAGS: