ரசிகர்கள் மத்தியில் வெற்றியை சந்தித்து கொண்டிருக்கும் பாண்டிய நாடு தற்போது பஞ்சாயத்தையும் சந்தித்துள்ளது.
விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வந்த ‘பாண்டிய நாடு’ படம் அனைவரது வரவேற்பையும் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிரானைட் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றிப் பேசுகிற இப்படத்தின் ‘கதை என்னுடையது’ என்று உரிமை கொண்டாடியிருக்கிறார் புவனராஜன் என்கிற உதவி இயக்குனர்.
அழகர்சாமியின் குதிரை படத்தில் சுசீந்திரனிடம் பணியாற்றிய புவனராஜன் தொடர்ந்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் படத்திலும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மணல்குவாரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை, இயக்குனர் சுசீந்திரனிடம் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து கதை விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில் அவரை அவாய்ட் பண்ண ஆரம்பித்த சுசீந்திரன், பிறகு அவரை தன் அலுவலகத்திற்குள் வரவிடாமல் தடுத்து விட்டாராம்.
என்ன காரணம் என்று புரியாமலே சுசீந்திரனைப் பார்க்க வருவதை நிறுத்திக்கொண்ட புவனராஜன், ‘பாண்டிய நாடு’ படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
மணல் குவாரி என்பதை கிரானைட் குவாரி என்று மாற்றம் செய்து தன் கதையை திருடி சுசீந்திரன் படம் எடுத்திருப்பது கண்டு கொதித்துப்போய் சுசீந்திரனிடம் நியாயம் கேட்க முயன்றிருக்கிறார்.
ஆனால் அவரை ஆப் பண்ணுவதற்காக பாண்டிய நாடு படம் வெளியான பின் அவருடைய வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் பணம் போட்டிருக்கிறார் சுசீந்திரன்.
அந்த பணத்தை வாங்க மறுத்து, இப்போது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் புவனராஜன். அதுமட்டுமல்ல பாண்டிய நாடு என்ற தலைப்பும் சுசீந்திரனுக்கு சொந்தமானதல்ல, இன்னொரு உதவி இயக்குனரான நாகராஜ் என்பவருடையது என்று கூறியுள்ளார்.