தொட்டில் குழந்தைகள்

aru nagappan-முனைவர் ஆறு. நாகப்பன்,  நவம்பர் 22, 2013.

 

ஐந்து மணி என்று போட்டிருந்த கூட்டத்திற்கு ஐந்தே முக்கால் வரை யாரும் வரவில்லை ஒரே ஒரு பெண்மணி வாசலில் நின்றுகொண்டு இரண்டு ஆண்கள் மட்டும் இருக்கிற அறைக்குள்ளே நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். “வாங்கம்மா, ஒக்காருங்க” என்று அவரை அழைத்தபடியே கண்ணன் ஆசிரியர் தனக்குத் தெரிந்த எண்களையெல்லாம் அழுத்திப் பேசிப் பார்த்தார். அவர் முகத்தில் அவநம்பிக்கைக் கோடுகள் ஒன்றுக்கு மேல் ஒன்று முறுக்கேறிக் கொண்டிருந்தன.

 

“அரை மணி நேரத்தில முடிஞ்சிடும்,  தயவு செய்து வந்திட்டுப் போங்க, ரொம்ப முக்கியமான  கூட்டங்க, நெலம என்னன்னு உங்களுக்குத் தெரியுமில்லே, தெரிஞ்சும் நீங்க ஒத்துழைக்கலேன்னா எப்படிங்க…” ஆளுக்கு ஒரு மாதிரி பேசிப் பார்த்தார். சிலரிடம் கெஞ்சிப் பார்த்தார். சிலரிடம் உரிமையோடு உரசிப் பார்த்தார். ‘நீங்க வந்தாதாங்க காரியம் நடக்கும்’ என்று உயரத் தூக்கிப் பார்த்தார். ரவியும் சிலருக்காகக் கைப்பேசியை அழுத்திச் சோர்ந்து போனான். மின்விசிறி ‘க்றீக்… க்றீக்’ என்று தன் இயலாமையைப் புலம்பிக்கொண்டிருந்தது. அதை மாற்றலாமா வேண்டாமா என்பதைப் பற்றிய விவாதம் ஆறு மாதமாக நடந்துகொண்டிருந்தது.

 

“நூத்திஅம்பது அறிக்கை அடிச்சுக் குடுத்தேங்க, போன்ல பேசினேன், நேராக் கண்டும் சொன்னேன். ஆளுக்கொரு காரணம் சொல்றாங்க. ஆனா உண்மை வேற சார், அத நெனச்சாத்தான் ஆத்ரம் ஆத்ரமா வருது…” கண்ணனின் குரல் தாழ்ந்து கனத்திருந்தது. இயல்பான பெரிய கண்கள் சிவந்து விரிந்தன.

 

ரவி அவரை ஏறிட்டுப் பார்த்தார். ‘உண்மை எனக்கும் தெரியும். இப்படிப்பட்ட நெருக்கடியான  நேரத்தில கூடவா நம்ம ஆளுங்களுக்குக் கூத்தும் கும்மாளமும் தேவப்படுது…’ அவன் பேசவில்லை. அந்த ‘ஆளுங்க’ மேல இருந்த சீற்றம், ஏதும் செய்யமுடியாத கையறுநிலை இரண்டும் அவன் முகத்தை அடையாளம் மாற்றியிருந்தது. ரவியைச் சமாதானப்படுத்த கண்ணனுக்குச் சரியான சொற்கள் கிடைக்கவில்லை. இன்னும் சில எண்களை அழுத்தித் தொடர்பு கிடைக்காததால், சொன்னார்…

 

“நேற்று இரவு சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் மாபெரும் கலைநிகழ்ச்சி. தமிழ்நாட்டின் பிரபல நடிகர் நடிகைகள் எல்லாரும் விடியற்காலை வரை ஆடியிருக்கிறாங்க. நம்ம ஆளுங்க இன்னும் அந்த மயக்கத்திலிருந்து எழல. கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கலாம்னா அடுத்த வாரம் சனிக்கிழமை நடக்கும் பட்டிமன்றத்திற்கு இப்பவே டிக்கட் வாங்கிட்டாங்களாம் தமிழ் நாட்டு முன்னணிப் பேச்சாளர்கள் பாடவும் நகைச்சுவையால் கலக்கவும் வந்து எறங்கிட்டாங்களாம்.”

 

கண்ணன் கொடுத்த தகவல்கள் புதியவை அல்ல என்றாலும் ரவி தன் கொதிப்பை அடக்கிக் கொள்வதற்கு அதையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்க முடியாதபடிக்கு வேறு வகையில் நிலைமை மோசமாக இருந்தது.

 

மணி ஆறரை ஆகியிருந்தது. அப்போதுதான் வந்து சேர்ந்த இன்னொரு அம்மையார் இருந்த பெண்மணியையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்.

 

இனியும் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை கண்ணனுக்குப் பத்து நாளைக்கு முன்பே நொறுங்கிப் போயிருந்தது. தலைமை ஆசிரியர் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையோடு  பள்ளியை மூடுவதற்குரிய ஏற்பாடுகளையெல்லாம் கமுக்கமாகச்  செய்து கொண்டிருந்தார். ‘பெற்றோர்கள் கலவரம் செய்யாதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பத்திரிகையில் செய்தி எதுவும் வந்துவிடக் கூடாது’ என்றும் கல்வித் துறை இயக்குனர் தனியாகக் கூப்பிட்டு அவரை எச்சரித்திருந்தார்.  அடுத்த வெள்ளிக்குப் பின் வரும் திங்கட்கிழமை பள்ளிக்கூடம் இடிக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காகக் கூடவே இருப்பார்கள் என்ற விவரங்கள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்திருந்தன.

 

ரவிக்கும் எல்லாம் தெரியும். கல்வித் துறையின் அதிகாரி ஒருவர் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். மலாய்க்காரர்தான். ஆனால்  “பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்ற முறையில் ஒரு இருநூறு பேரையாவது திரட்டிக் கொண்டு மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் முன்னால் வன்செயல் இல்லாத மறியல் செய்யுங்கள்” என்று ஆலோசனை கொடுத்ததும் அவர்தான். அந்தத் திட்டத்தைப் பள்ளிக்கும் தெரியாமல் நிறைவேற்றுவதற்குத்தான்  இந்தக் கூட்டம்  கூட்டப்பட்டது. ரவி இதைக் கண்ணனிடமும் சொல்லவில்லை. பெற்றோர்களே முடிவு எடுப்பது போல் செய்துவிட்டால் ஆசிரியர்கள் எதிர்க்கத் துணிய மாட்டார்கள் என்று ரவி கணக்குப் போட்டிருந்தான்.

 

“இது எங்க அப்பா படிச்சப் பள்ளிக்கூடம். அப்புறம் நான் படிச்சதும் இங்கதான். இப்ப என் மகன் இங்க படிச்சி, இடைநிலைப் பள்ளியைத் தாண்டிப் பல்கலைக்கழகமும்  போறான். அவனைப் பாராட்டி வழியனுப்ப இந்த விருந்த நீங்க ஏற்பாடு செஞ்சியிருக்கீங்க, இந்தப் பள்ளிக்கூடம் நம்ம கோயில் , உங்களுக்கெல்லாம் என் நன்றி…” என்று ரவியின் அப்பா ஆனந்தக் கண்ணீரோடு பேசிய பேச்சு ரவியின் காதுகளில் தெளிவாகக் கேட்டது.

 

“அப்பாவும் தாத்தாவும் மிகவும் நேசித்த இந்தக் கோயில் இன்னும் சில நாட்களில் ராட்சச யந்திரங்களின் இரும்புப் பிடியில் நொறுங்கப் போகிறது. அந்தக் கொடுமையை  அவருடைய ஆன்மா உணரும். அது கட்டாயம் துடிக்கும்..”

 

கனத்துப் பருத்த அந்த ராட்சச யந்திரங்கள் வெறும் யந்திரமாக மட்டுமல்ல, தங்களால் ஊடுருவ முடியாத வலிமை மிக்க ஒரு கட்டமைப்பின் படிமமாகவும் ரவிக்குத் தோன்றியது.  அப்பாவுக்காகவும் அந்தக் கோயிலுக்காகவும் அவன் உள்ளுக்குள் அழுதான்.

 

நீங்க வந்த ரெண்டு வருஷத்தில பள்ளிக்கூடத்த எவ்வளவோ மேம்படுத்தீட்டீங்க., நம்ம யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவு பத்திரிகங்க பாராட்டற அளவுக்கு வந்திச்சு, இப்பப் போயி இப்படிங்கறது தாங்க முடியலீங்க ரவி…” கண்ணன் இப்போது உண்மையாகவே கண் கலங்கினார்.

 

“என்னங்க செய்யறது, ஆறு மாசம். சட்டமன்றம், நாடாளுமன்றம், எல்லா ஒய். பி.யையும் பாத்தாச்சி. கட்சித் தலைவர், கல்வி அமைச்சர் வரப் போயாச்சி. இடிபடறத ஒரு மாசம் தள்ளிப் போட்டாங்க, ரெண்டு மாசம் தள்ளிப் போட்டாங்க. இப்பப் பிள்ளங்கள பிரிச்சிப் பக்கத்தில உள்ள பள்ளிக்கு அனுப்பறாங்க. படிக்கிற நூத்தி இருவது பிள்ளைங்கள்ல அறுவது எழுவது பிள்ளங்க பள்ளிக்கு போகாம நிக்கப் போறாங்க.. எழுவது எம்பது வெள்ளி குடுத்து தொலைவில உள்ள பள்ளிக்கூடத்திற்கு எல்லாரும் அனுப்ப முடியுமா? எதுக்கும் அடுத்த புதன் கிழம இன்னொரு கூட்டத்தக் கூட்டிப் பாப்போம்” ரவி எழுந்து கொண்டான்.

 

‘அன்னைக்கித்தானே ஆஸ்ட்ரோவில ‘பாட்சா’ ஓடுது’ கண்ணன் மனசுக்குள் சொல்லிக் கொண்டு எழுந்தார்.

 

அப்போது ரவியின் கைப்பேசி சிணுங்கியது. காதில் வைத்த போது கண்ணகி பேசினாள்.

 

“வர்றதுக்கு நேரமாகுங்களா…?”

 

“ஏன்…?”

 

ஒன்னுமில்லைங்க, குமரன் ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருக்கான்…”

 

“இதோ, வீட்டுக்குதான் வர்றேன்”

 

ரவி காரைக் கிளப்பினான். அடுத்த வினாடி அவன் வீடு அவன் காட்சியிலிருந்து விலகிப் போய் அப்பாவின் ‘கோயில்’ அவன் கண் முன்னால் நடுங்கத் தொடங்கியது.

 

அவன் மனம் அவனிடம் இல்லை. எல்லாம் அனிச்சையாக நடந்தன. பள்ளியைக் காப்பாற்றுவதற்குக் கடந்த சில மாதங்களாக அவன் நடத்திய போராட்டங்கள் தனித்தனித் காட்சியாக அவன் முன்னால் ஓடின.

 

“நாட்டில எவ்வளவோ நிலம் எங்கெங்கேயோ கிடக்கு.. அதில ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தாலும் போதும். எல்லா பந்துவான் மோடல் பள்ளிக்கூடமும் பந்துவான் பெனோ ஆயிடும்…”

 

“சேகு ரவி, உங்க கோரிக்கை நியாயமானதுன்னு எனக்குத் தெரியும். நீங்க குடுக்கிற புள்ளிவிவரமெல்லாம் உங்க கோரிக்கைய திட்டவட்டமா நியாயப்படுத்துது. ஆனா, ஒரு சாதாரண மாவட்ட அதிகாரி நான். அரசாங்கத்தின் கொள்கைப்படி கெடைக்கிற உத்தரவுப்படி செயல்பட வேண்டியவன். இது டாசார் கெராஜாஅன். நான் அத மாத்த முடியாது, மாஅப்கான் சய…”

 

“ஒய். பி, போன தேர்தல்ல எங்க பள்ளிக்கூடத்திற்குப் புதிய கட்டடம் வரப்போகுதுன்னு சொன்னீங்க. அதச் சொல்லித்தான் நாங்க உங்களுக்காகப்  பிரச்சாரம் செஞ்சோம். நீங்க ஜெயிச்சி வந்தீங்க. இப்ப எங்க நெலமைய பாத்தீங்களா… டெவலப்பர் ஒரு மாசம் கெடு குடுத்து கடிதம் அனுப்பியிருக்கான்….

 

“அப்படியா, என்ன இது ஆச்சரியமா இருக்கு.. புதுக் கட்டடம் கட்ட எல்லா ஏற்பாடும் நடக்குதே, போன ‘எக்ஸ்கோ’வில  கூடப் பேசியிருக்கேனே…”

 

“அப்படின்னா இந்தக் கடிதத்துக்கு என்ன அர்த்தம்?”

 

“இந்த ‘டெவலப்பர’ கூப்பிட்டுப் பேச நான் ஒடனே ஏற்பாடு செய்யறேன், பயப்படாதீங்க.”

 

“வாங்க மிஸ்டர் ரவி, உங்களுடைய ரிஞ்சிங் டாலாம் தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பா கல்வி அமைச்சரோட பேசிட்டேன். டெவலப்பர் கொஞ்சம் அடம் பிடிக்கிறான். கல்வி அமைச்சர்கிட்டே  டெவலப்பர் பற்றிய விவரமெல்லாம் குடுத்திருக்கேன்.  ரிஞ்சிங் டாலாம் ரிஞ்சிங் டாலாம்லதான் இருக்கும். அத மாத்த எந்தக் கொம்பன் வந்தாலும் முடியாது….”

 

“டத்தோ, உங்க நம்பிக்கையான வார்த்த எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. கெடு முடிய இன்னும் ரெண்டு வாரம்தாம் இருக்கு, அதுதான் பயமா இருக்கு…”

“ஒன்னுக்கும் கவலப்படாதீங்க, போய்ட்டு வாங்க….”

 

“கண்ணன், தலைம ஆசிரியர் என்ன பண்றார்….?”

 

“அவரும் இங்க அங்கனு அலைஞ்சிகிட்டுத்தான் இருக்கார். ஆனா, பள்ளிக்கூட விஷயமா இல்லே…”

 

“வேற என்ன அவருக்குத் தல போற வேல…?”

 

“தல போற வேல இல்ல சார், தலைமை போற வேல. அதாவது போன கட்சித் தேர்தல்ல இவரும் இவரோட சேர்ந்து எட்டுக் கிளைகளும் ‘பி’ டீமுக்கு வேல செஞ்சாங்கன்னு ஏதோ ஒரு பத்திரிகையில செய்தி வந்திடுச்சாம். பாவம் இவரு ரொம்ப விசுவாசமான ஆளுதான். ஆனா சிண்டு முடிக்கிறதுக்கினே செல பேப்பர் வருதே, அதுல மாட்டிக்கிட்டு அலயறார்…..”

 

“பொழுது விடிஞ்சி பொழுது போனா நம்ம ஆளுங்களுக்கு இதுவும் ஒரு பொழுது போக்கா போயிடிச்சில்லே…”

 

“வாங்க ரவி சார், நான் ஏன் காஜாங்லேர்ந்து செலங்கூர் கெளப்புக்கு உங்கள வரச் சொன்னேன் தெரியுமா, மிஸ்டர் ரவி….? இந்த எடத்திலதான் பல முக்கியமான அரசியல் முடிவுகள்லாம் எடுத்துருக்காங்க. நீங்க ரொம்ப நல்லா தொண்டு செய்யறீங்க, அதோட கொஞ்சம் அரசியல் ஞானம் வந்துட்டா, யாரு கண்டது நீங்களும் ஒரு காலத்தில ஒரு ஒய். பி ஆகலாம்….”

 

“ஓய். பி., எங்க பள்ளிக்கூடம் விஷயமா உங்கள ரெண்டு மூனு தடவ பார்த்திட்டேன்….”

 

“பொறு, பொறு, என்னைப் பாத்தா என்னை மட்டுந்தான் பார்க்கணும், நீங்க யார் யாரையோ போயி பார்க்கிறீங்க ..அவங்கள்லாம் என்ன பண்ணுனாங்க… ரிஞ்சிங் டாலாம் என் தொகுதிக்குள்ளே இருக்கு, என்னத் தாண்டி யாராவது அங்க நொழைய முடியுமா…?”

 

“சரி.. உங்களால எங்களுக்கு எப்படி உதவ முடியும்? தயவு செய்து எங்க பிரச்சனைக்கு வாங்க….”

 

“டேய்… ராமையா, கார்ல அந்த ‘போர்ம்’ இருக்கில்லே, எடுத்தா…. மிஸ்டர்  ரவி,  அந்தக் கிளாச எடுங்க, விஸ்கியா, பிராண்டியா எது உனக்குப் பிடிக்கும் …?”

 

“சாரி, எனக்குப் பழக்கமில்லே…”

 

“பழகிட்டா போச்சி….இதோ பார், வர்ற அகொங் பேர்த்டேயில ஒனக்கு ஒரு பி.பி.என். கெடைக்கப் போவுது, அதுக்குப் பெறகு நீ என்ன நெனைச்சாலும் நடக்கும்…..”

 

“ஓய். பி. ரிஞ்சிங் டாலாம் பள்ளிக்கூடத்தக் காப்பாத்தணும், அதுதான் என் வேல. தயவுசெய்து நீங்க என்ன செய்ய முடியும்னு சொல்லுங்க…”

 

“ரவி, அவசரப்படாதே, முப்பது வருஷத்துக்கு முன்ன நானும் உன்ன மாதிரிதான்  இருந்தேன். உள்ளே வந்த பெறகுதான் எல்லாம் தெரிய ஆரம்பிச்சது…. டேய் ராமையா, இது வரைக்கும் எத்தனை தடவைடா ஊத்தினே….”

 

“நாலு தடவை ஒய். பி…”

 

“மறந்து போச்சி, ஆங்… ரவி, மப்புல பேசறேன்னு நெனைக்காதே,  நேத்து ராத்திரி அந்த டெவலப்பர் ஓடியாந்து எங் கால்ல விழுந்தான், வம்பு வழக்கு இல்லாம பிரச்சனைய முடிக்கச் சொல்றான். மெர்டேகாவுக்கு முன்னால எண்ணூறு பள்ளிக்கூடம் இருந்திச்சி, இன்னைக்கு என்ன ஐநூத்தி சொச்சமா, முந்நூறு பள்ளிக்கூடம் போச்சே, அப்பவெல்லாம் எங்க போனீங்க, அதுல ஒன்னு இது, பொழைக்கிற வழிய பாருப்பா….”

 

“ஒய். பி. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனா நீங்க தப்பான ஆளுகிட்டே பேசறீங்க… டெவலப்பர் உங்களுக்குக் குடுக்கிற பணத்துக்குப் பதிலா எனக்கு ஒரு பி.பி.என். குடுக்கப் பார்க்கிறீங்க… எனக்குப் பணமும் வேண்டாம், பட்டமும் வேண்டாம். இந்தப் பள்ளிக்கூடம் ஒடைபடக்கூடாது, அவ்வளவுதான்… நான் வர்றேன்…”

 

“பொறுப்பா, ஏன் அவசரப்படற… என்ன டிகிரி பண்ணின…. சயன்ஸா, கேள்விப்பட்டேன், ‘பிஸிக்ஸ்’ தானே, பத்தாது, இன்னொரு முறை போயி பொலிடிகல் சயன்ஸ் படிச்சிட்டு வா… இங்கப் பாருப்பா, பள்ளிக்கூடமா…? கோயிலா…? நம்ப பிரச்சனைய தீர்க்க அம்பது வருஷமா வேணும்…. ஒரு நாள், ஒரே ஒரு நாள் போதும், ஆனா தீர்க்க மாட்டோம்… ஏன் தெரியுமா, பிரச்சனைதாம்பா எங்களுக்குச் சாப்பாடு. அது இல்லேன்னா நாங்க செத்துப் போயிடுவோம். எல்லாப் பிரச்சனயையும் தீர்க்கறதுங்கறது  தற்கொல பண்ணிக்கிற மாதிரி…. எந்த அரசியல்வாதியாவது இப்படி ஒரு தற்கொலயைப் பண்ணிக்குவானா…?   ஆனா அதே சமயத்தில மக்களுக்கு நாங்க எவ்வளவு வசதி பண்ணிக் குடுக்குறோம் தெரியுமா…? ரேடியோ, டெலவிஷன் எல்லாம் இருவத்து நாலு மணி நேரம், அவ்வளவும் சினிமாக் கூத்து…! வாரத்துக்கு ஒரு படம் பார்த்தீங்க, இப்ப ஒரு நாளைக்கு எத்தனப்படம் ஒடுது…?வெளி நாட்லேர்ந்து ஒரு அறிவாளி வந்தா அவன ஆயிரம் முறை சோதிப்போம், ஆனா கூட்டம் கூட்டமா சினிமாக்காரங்கெல்லாம்  தாராளமா வந்திட்டுப் போறாங்களே எப்படி…?  இஸ்லாம்தான் ‘ஆவ்பீஸியல் ரெலிஜன்’ ஆனா எத்தன பீர் கம்பெனி…? விஸ்கி, பிராண்டினு கர பொரண்டு ஓடலே…? எல்லா வயசுக் காரங்களுக்கும்  ஒவ்வொரு ‘எண்டர்டெய்ன்மெண்ட்’ வச்சிருக்கோம். இப்ப நாடு அமைதியா சுபிட்சமா இருக்கில்லே,  புரியுதா போலிட்டிக்னா என்னனு…?”

 

‘பீய்ங்ங்…..’

 

“ஏ, லூ பாப்பா புஞ்சா ஜாலான்கா…?”

 

ரவி சடக்கெனச் சுய நினைவுக்கு வந்தான். பயங்கர வேகத்தில் கடந்து போன அந்த லாரி வீசிவிட்டுப் போன காற்றில் இவன் ‘வீரா’ அங்குமிங்கும் அலைந்து பின் நிதானப்பட்டது. காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது கண்ணகி கைக்குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.

 

“ஏன், என்ன, தூங்க மாட்டேங்கிறானா…?”

 

“என்னமோ தெரியலீங்க, வீல், வீல்னு அழறான். வயித்து வலி போல இருக்கு. ரெண்டு கரண்டி கிரேப் வாட்டர் கூடக் குடுத்தேன். அப்பவும் கத்தறான். இன்னும் ரெண்டு கரண்டி ஊத்தன பெறகுதான் தூங்கறான்….”

 

“அதுல எக்கச்சக்கமா ‘அல்கஹால்’ இருக்கே, குழந்த வயத்துவலி நீங்கித் தூங்கறானா…?இல்லே மப்புல தூங்கறானா…?”

 

சற்று நேரத்திற்கு முன் சிலாங்கூர் கிளப்பில் ‘எல்லாருக்கும் ஒரு எண்டடேய்மெண்ட்’ என்று ஒய்.பி. சொன்ன அரசியல் தத்துவம் இப்போது ரவிக்கு நன்றாகப் புரிந்தது.