எழவு வீட்டில் காதல்: எங்கே போகிறது தமிழ்சினிமா!

vilaகாதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்தான். ஆனால் அத்தைகைய காதலை தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்தால் தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம்.

வயிற்றில் இருக்கும் குழந்தையும், செத்துப்போன பிணமும்தான் இன்னும் காதலிக்கவில்லை. குஷி படத்திலோ ஜனிக்கும் இரண்டு குழந்தைகளைக் காட்டி எதிர்காலத்தில் இந்த இரண்டு குழந்தைகளும் காதலிக்கப்போகிறார்கள் என்று முன்னுரைத்துவிட்டு ‘லவ்’வ வைத்தனர். பள்ளி மாணவர்கள் முதல் பல்லுப்போன கிழங்கள் வரை காதலித்துவிட்டனர் – தமிழ்சினிமாக்களில். காதலிப்பதற்கான இடமாய் கல்லூரிகளின், பள்ளிகளின் வகுப்பறைகள், பள்ளியறைகளாய் மாற்றப்பட்டு பல காலமாகின்றன.

இவர்கள் விட்டு வைத்த ஒரே இடம் எழவு வீடுதான் என்று இதுவரை நிம்மதி பெருமூச்சுவிட்டோம். அதற்கும் இப்போது வேட்டு வைத்துவிட்டனர். அதாவது மரணம் நிகழ்ந்த சாவு வீட்டிலும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர் தமிழ்சினிமாக்களில். விரைவில் வெளிவரவிருக்கும் விழா படத்தின் கதாநாயகன் சாவு வீட்டில் தப்பு அடிப்பவன். கதாநாயகியோ சாவு வீட்டில் காசுக்கு ஒப்பாரி வைப்பவளின் பேத்தி. இந்தப் படம் முழுக்க சாவு வீட்டிலேயே காதல் வளர்கிறது – இருவருக்கும்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஒரு காட்சி! கதாநாயகி ஐஸ்வர்யா வீட்டில் சாவு. பிணத்தை எடுத்துச்செல்லும்போது பின்னால் செல்லும் ஹீரோ திரும்பி, கதறி அழுது கொண்டிருக்கும் கதாநாயகியைப் பார்த்து காதலோடு லுக் விடுகிறார்… தீபாவளி வெளியீடாக வெளி வந்த பாண்டியநாடு படத்தில் ஒரு பாடல் காட்சி முழுக்கவே சாவு வீட்டின் பின்னணியில்… விரைவில் வெண்திரைக்கு வரும் மதயானைக்கூட்டம் படத்திலும் இதேபோன்றதொரு பாடல் காட்சி..!

இதைவிடுங்க சமீபத்தில் வெளியான இரண்டாம் உலகம் படத்தில் இறந்த காதலியை தேடி நாயகன் வேறொரு உலகத்திற்கு செல்கிறார். இப்படியெல்லாம் காதலை சொல்லும் இயக்குனர்கள், தங்கள் வீட்டில் யாராவது காதலித்தால் அதை எதிர்க்கிறார்கள். இது என்ன விதத்தில் நியாயம். இளைஞர்களே சிந்தியுங்கள்…