ஒரு வித்தியாசக் களத்தில் பல விதவிதமான மனிதர்களிடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை ஜன்னல் வழியாக காட்டுகிறது ஜன்னல் ஓரம். சந்தோஷம், சோகம், கண்ணீர், பகை, காதல், கொலை என அனைத்தும் நிறைந்திருக்கும் இந்த பயணம் சுகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைந்திருக்கிறது.
மலையாள திரைப்படமான ஆர்டினரி படத்தின் ரீமேக் ஜன்னல் ஓரம் என்பதாலும் அதை கரு.பழனியப்பன் இயக்குகிறார் என்பதாலும், இது நல்லப் படமாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்துவந்தது. ஏமாற்றங்கள் எதுவும் இல்லாமல் அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.
தினமும் பழனியிலிருந்து பண்ணக்காடு சென்றுவரும் அரசு பேருந்தில் ஓட்டுனராக பார்த்திபன் நடத்துனராக விமல். மாலை பழனியிலிருந்து பண்ணக்காடு செல்லும் பேருந்து அடுத்த நாள் காலை பண்ணக்காடில் இருந்து பழனி வந்து சேர்கிறது. ஒரு நாளைக்கு ஒரு ட்ரிப் தான் என்பதால், இரவு நேரங்களில் ஓட்டுனரான பார்த்திபனும் நடத்துனரான விமலும் பண்ணக்காட்டிலேயே தங்குவது வழக்கம்.
புதிதாக வேலைக்கு சேரும் விமல் அந்த பேருந்தில் தினமும் பயணம் செய்யும் மனீஷாவை காதலிக்கிறார். எப்போதுமே குவாட்டரோடு குடும்பம் நடத்தும் பார்த்திபன், பேருந்தை ஓட்டுவது மட்டுமல்லாமல் அந்த ஊர் கன்னிப்பெண்களுடன் சின்னச் சின்ன சில்மிஷங்கள் செய்து காலத்தை ஓட்டுகிறார்.
பண்ணக்காடு பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஷ். யாருமே இல்லாத தன் நண்பனின் மகளான பூர்ணாவை தன் மகள் போல தன் வீட்டிலேயே வளர்த்துவருகிறார் ராஜேஷ். ஊரில் யார் எந்த வேலை சொன்னாலும் ஓடி ஓடி செய்கிறவர் விதார்த். வெளியூரில் வேலைப்பார்க்கும் ராஜேஷின் மகனை திருமணம் செய்யவிருக்கும் பூர்ணாவை எப்படியாவது கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறவர் ரமணா.
ஓட்டுனர் பார்த்திபன் போதையில் இருப்பதால் நடத்துனர் விமல் பேருந்தை ஓட்டிக்கொண்டு வருகிறார். இருவரும் மெய்மறந்து பாடிக்கொண்டு வருகிறார்கள். திடீரென பேருந்தின் முன்பு ஒருவன் வந்து விழுந்துவிட, சடன் பிரேக் அடித்து பேருந்தை விமல் நிறுத்த, எதிரில் ஒருவர் அடிபட்டு விழுந்துகிடப்பதைப் பார்க்கிறார்கள். எதிரில் வரும் ஒரு ஜீப்பில் அவரை ஏற்றி மருத்துவமனையில் சேர்க்கும் படி சொல்லிவிடுகிறார்கள். கையில் ஒரு பை கிடைக்க, அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து அது ராஜேஷின் மகன் என்றும் இவர் தான் பூர்ணாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரியவருகிறது.
அடுத்த நாள்… மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் மலையடிவாரத்தில் இறந்துகிடப்பதாக செய்திவருகிறது. அதிர்ந்து போகும் விமலும் பார்த்திபனும் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். நான் தான் அவனை கொன்றுவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியில் துடிக்கிறார் விமல். ராஜேஷின் மகன் கொண்டுவந்த பை விமல் தங்கி இருக்கும் வீட்டில் இருப்பது தெரியவர. ஊரே கூடி கேள்விகேட்டதும், நடந்ததை சொல்கிறார் விமல், கொலைகாரன் என்று பட்டம் கொடுத்ததோடு, அவரை அடித்துத் துவைக்கிறார் விதார்த். விமலை போலிசில் ஒப்படைக்கிறார்கள் ஊர் மக்கள்.
மருத்துவமனைக்கு வண்டியில் ஏற்றிவிடப்பட்டவன் எப்படி மலையடிவாரத்தில் இறந்துகிடந்தான் என்ற குழப்பதுடனும் தான் கொலையாளி இல்லை என்று நிரூபிக்கவும் என்ன நடந்தது என்ற உண்மையை தெரிந்துகொள்ள விமலும் பார்த்திபனும் முயற்சிக்கிறார்கள். யார் கொன்றது? எதற்காக அந்த கொலை நடந்தது? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
நடிகர் பட்டாளமே இருக்கும் ஜன்னல் ஓரத்தில் ஆட்ட நாயகனாக திகழ்வது விதார்த் தான். மைனாவுக்குப் பிறகு இதிலும் பேசப்படுவார் என்பது நிச்சயம். கதாபாத்திரதிற்கு ஏற்ற தேர்வு பார்த்திபன். எப்போதும் போதையில் இருப்பவர் தன் குடும்ப சோகத்தை சொல்லி நெகிழவைக்கும் காட்சி அற்புதம். பார்த்திபன்னா சும்மாவா! அடுத்து மனதில் நிற்பவர் விமல். வெகுளியாய் விளையாட்டாய் தனக்கு எது வருமோ அதை மட்டுமே தொடர்ந்து செய்துவருகிறார். ஊர்காரர்கள் பெரியவரிடம் பிரச்சனை பண்ணும்போது, எட்டி இடுப்புமேல் உதைக்கிறாரே… சூப்பரப்பு!
பூர்ணா அதிக காட்சிகள் இல்லை, அதிக வசனம் இல்லை என்றாலும் காதலன் தனக்கு வாங்கி வைத்த சேலையைப் பார்த்துக் கண்ணீர் விடும்போதும், விமலிடம் ஆவேசமாக பேசும்போதும் அசத்தல் நடிப்பு. பேருந்தின் ஜன்னலோர தென்றலாக வந்து, குரும்புத்தனமான நடிப்பு என்றாலும் பாடல்களுக்கு மட்டுமே அதிகம் அவசியப்படுகிறார் மனீஷா. பேருந்தில் இருக்கை கிடைகாமல் ஓரமாகவே நின்று மறைந்துபோகிறார் ரமணா.
மனீஷா விமலிடம் மீதி சில்லரை ஒரு ரூபாயைக் கேட்கும் காட்சியில், ஒரு ரூபாய்க்கு சண்டை போடுங்க, மொத்தமா கொண்டுபோய் ஈமு கோழிமேல கொட்டுங்க என்ற வசனம் நச்! கொஞ்சம் வேலை செய்தால் கூட எனக்கு வேர்வை வருகிற வியாதி இருக்கு என்று ஓசி குடி குடிக்கும் சிங்கம் புலி வரும் காட்சிகள் ஜாலி டைம். வித்யாசாகரின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் ‘அடடா… அபாரம்!’ என்று சொல்வதற்கு எதும் இல்லை.
மொத்தத்தில் ஜன்னல் ஓரம் சுகமான பயணமாகவே இருந்தது. ஆனால் ஒரு அறிமுக இயக்குனர் செய்ய வேண்டிய படத்தை கரு.பழனியப்பன் செய்திருக்கிறார் என்பது மட்டுமே ஆச்சரியம் கொடுக்கிறது. கரு.பழனியப்பனின் மேடைப் பேச்சுக்கள் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்குமோ அதைவிட அதிக சுவாரஸ்யம் அவர் எடுக்கும் படங்களில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்! இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் டைரக்டர் சார்…
ஜன்னல் ஓரம் – சுகமான பயணம்!