சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

filmசர்வேதச திரைப்பட விழா சென்னையில் வரும் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இது குறித்து சென்னையில் திரைப்பட விழாவின் இயக்குநர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழ் சினிமா படைப்பாளிகள் 500 பேரை உறுப்பினராகக் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு சார்பில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் சென்னை திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் 11-வது சர்வதேச திரைப்பட விழா வரும் 12-ம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 8 நாள்கள் சென்னையில் நடக்கிறது.

கடந்த ஆண்டுகளைவிட இந்த முறை சிறப்பான முறையில் பட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு 58 நாடுகளைச் சேர்ந்த 163 படங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றன. கேன்ஸ், வெனிஸ், பெர்லின் ஆகிய புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கலந்த கொண்டு விருது பெற்ற படங்களும் இடம்பெறுகின்றன. உலக அளவில் புகழ் பெற்ற திரைப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளனர்.

உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி மெகா மால், கேஸினோ, ராணி சீதை அரங்கம் உள்ளிட்ட இடங்களில் இப்படங்கள் திரையிடப்படுகின்றன. விருது பட்டியலுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறப்புத் திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு இப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவின் போது பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் இறுதி நாள் விழாவில் மலையாள நடிகர் மோகன்லால் கலந்து கொள்கிறார். தொடக்க விழாவும், நிறைவு நாள் விழாவும் சேத்துப்பட்டில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நடைபெறுகிறது என்றார் தங்கராஜ்.

அனிருத்துக்கு விருது

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கு இசையமைப்பாளர் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படங்கள் குறித்த விவாதக் கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளன. இதில் திரைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்கள் பலர் பங்கேற்கின்றனர்.