கஞ்சா கருப்பு விழாவில் இடமில்லாமல் நின்ற அமீர்!

ஹீரோ, வில்லன், காமெடியன் என பன்முகம் கொண்டு எந்த கதாபாத்திரத்திலும் தேவையான அளவு நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் கஞ்சா கருப்பு வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

பாலா படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமாகியதால் கஞ்சா கருப்பு என்ற பெயர் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. அமீரின் ராம் படத்திற்கு ஒரு காமெடியன் செலக்ட் செய்கிறார்கள். ஷூட்டிங்கிற்காக செல்ல அந்த காமெடியன் ஃபர்ஸ்ட் கிளாஸ் ரயில் டிக்கெட் கேட்க, டிக்கெட்டே இல்லாமல் அழைத்துவர வேண்டியவருக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் கேட்கிறாதா? என கோபப்பட்டு ”பாலா ஆபீஸ்ல கருப்புனு ஒருத்தன் தூங்கிகிட்டு இருப்பான் போய் கூட்டிகிட்டு வாங்க” என்கிறார் அமீர்.

பாலா படத்திற்குப் பிறகு இப்படித்தான் கஞ்சா கருப்புக்கு திரையுலகில் தொடரும் வாய்ப்பு கிடைக்கிறது. பருத்திவீரன், சுப்ரமணியபுரம், அறை எண் 305-ல் கடவுள் என வரிசையாக நடித்த படங்களின் வெற்றியில் தனது நடிப்புத் திறமையையும் ஒரு பகுதியாக கொடுத்து புகழ்பெற்றார் கஞ்சா கருப்பு.

கஞ்சா கருப்புவின் வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமீர் “ ராம் படத்தின் தியேட்டர் விசிட்டிற்கு சென்றிருந்த போது நான் உள்ளே போனதும், தியேட்டர் ஊழியர்கள் கஞ்சா கருப்புவை உள்ளே விடவில்லை. இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியபின் தான் உள்ளேவிட்டார்கள். ஆனால் அதே கஞ்சா கருப்புவை படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதைப்பார்த்து சந்தோஷப்பட்டதை விட நான் இப்போது தான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்.

இன்று நான் தாமதமாக வந்ததால் உட்கார இடமில்லாமல் கதவோரமாக நின்றுவிட்டேன். தமிழ்த்திரையுலகமே கொண்டாடும் விஜய் சேதுபதி எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் முருகதாஸ் உள்ளே அமர்ந்திருந்தார். சினிமாவில் கஞ்சா கருப்பு வளர்ந்திருக்கிறார், வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் கிடையாது” என்று கஞ்சா கருப்புவை வாழ்த்திப் பேசினார்.