45 ஆண்டு சினிமா கலைஞன் பாலுமகேந்திரா இயக்கியுள்ள புதிய படம் தலைமுறைகள். இப்படத்தில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தாத்தா கேரக்டரில் நடித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள்…
01.தலைமுறைகள் உருவானது பற்றி?
இன்றைக்கு பல உறவுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. போற்றி பாதுகாக்க வேண்டிய உறவுகளை, எப்படி விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தபோது தான், தலைமுறைகள், கதை உருவானது.
02இந்த படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்களே?
ஆம்; தாத்தா வேடத்தில் நடிக்கிறேன். தாத்தா – பேரனுக்கு இடையிலான உறவைப் பற்றி அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் தமிழ் பேசி, நிறைய ஆங்கிலம் பேசும் பேரன், ஓரிரு வார்த்தை மட்டுமே, ஆங்கிலம் பேசும் தாத்தா. இவர்களுக்கிடையிலான நேச உணர்வின் நெகிழ்ச்சியை, உயிரோட்டமாக படம் பிடித்திருக்கிறேன்.
03.டிஜிட்டல் சினிமா யுகத்தை பற்றி உங்கள் கருத்து?
இதுவரை ஒளிப்பதிவாளராக மற்றும் இயக்குனராக பணியாற்றிய அனைத்து படங்களிலும், படச்சுருளில்தான் (பிலிம்) படமாக்கி வந்தேன். ஆனால், சமீப காலமாய் எல்லாமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருப்பதால், நானும் தலைமுறைகள் படத்தை டிஜிட்டல் கேமரா வைத்து, இயக்கியுள்ளேன். அப்போது தான், நாளைய சினிமா, டிஜிட்டல் சினிமா தான் என்பதை, புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கண்டு வியந்தேன்.
04.தமிழ் சினிமா எந்த வகையில் அதிக முன்னேற்றம் அடைந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
எல்லா வகையிலும், நாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். கலாசாரம், தொழில்நுட்ப ரீதியாக யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல. அதனால்தான் ஈரான், இத்தாலி, பிரான்ஸ் படங்களைப் பார்த்து, நம்மவர்கள் வாயை பிளந்து நிற்கிற நிலையை மாற்றி, நம் படங்களைப் பார்த்து,அவர்களை வாய் பிளக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எடுக்கப்பட்ட படம் தான், இந்த ‘தலைமுறைகள்.’
05.உங்களது படங்களுக்கும் இளையராஜாவே இசையமைப்பதேன்?
என் மூன்றாவது படமான மூடுபனியில், இளையராஜாவுடன் இணைந்தேன். அது அவருக்கு, 100வது படம். அவரிடம், எதுவும் கேட்டு வாங்க வேண்டியதில்லை. படத்தின் தன்மையை உணர்ந்து கொண்டு, தேவையான இசையை கொடுத்து விடுவார். அவருக்கு இணையான அற்புத இசையை, வேறு யாராலும் கொடுக்க முடியும் என்று, எனக்கு தோன்றவில்லை. அதனால், அவரை எக்காரணம் கொண்டும், நான் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.