ஈழப் போரில் சிக்கி அல்லல்படும் சாதாரண மக்களின் கண்ணீர் காவியம்தான் ‘ராவண தேசம்’ திரைப்படம். தமிழகத்தில் வெளியாகி கவனிக்கப்படாமல் போன இந்தப் படத்தை வைகோ, தமிழருவி மணியன், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களுக்குத் திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் ராவண தேசம் குழுவினர்!
புலிகளின் ஆளுகையின் கீழ் ஈழ மக்கள் வாழும் முல்லைத் தீவைப் பிடிக்கிறது சிங்கள இராணுவம். காதல், வறுமை, தாயகக் கனவுகளோடு வாழும் மக்களை சிங்கள இராணுவம் சிதைக்கிறது. பெண்களைப் பாலியல் வன்முறை செய்கிறது. மக்களைக் கொன்றுவிட்டு பழியைப் புலிகள் மீது போடுகிறது.
நரவேட்டை ஆடி முடித்த சிங்கள இராணுவத்தை சில நாட்களுக்குப் பின்னர் புலிகள் வெல்கிறார்கள். ஒரு பக்கம் இராணுவம், இன்னொரு பக்கம் புலிகள் என இரண்டு இராணுவ நெருக்கடிகளுக்கிடையே இருந்து தமிழகம் தப்ப நினைக்கிறார்கள் நான்கு ஜோடிகளும் இரண்டு நண்பர்களும். ஒரு கைக் குழந்தையோடு தமிழகத்துக்கு அகதிகளாகக் கிளம்புகிறார்கள்.
நடுக்கடலில் வரும் கப்பலைப் பார்த்து ரோந்துக் கப்பல் என்று பயந்து படகில் பதுங்குகிறவர்கள். படகு திசைமாறி விடுகிறது. பல நாள் போராட்டத்தின் பின்னர் ஆந்திராவின் காக்கிநாடாவில் படகு ஒதுங்கும்போது பலரும் இறந்துவிடுகிறார்கள்… என ஈழ மக்களின் துயரமான கடல் பயணத்தைக் கண்ணீரோடு பேசுகிறது ‘ராவண தேசம்.
வெடிக்கும் குண்டுகளும் சிதறும் உடல்களுமாகப் போர்க்களத்தின் கோரக் காட்சிகள் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. படகில் இடம் இல்லாமல் வயதான அம்மாவைவிட்டுச் செல்லும் மகன், மக்களுக்குக் கொடுக்காமல் பதுங்குக் குழிக்குள் நிவாரணப் பொருட்களைப் பதுக்கிவைக்கும் சுயநல வியாபாரி, நண்பனும் தங்கையும் தப்பிச் செல்வதை, இயலாமையுடன் வழியனுப்பி வைக்கும் புலி நண்பன், உயிரைப் பற்றி கவலைப்படாமல் காதலோடு திரியும் நாயகி, ‘நான் இந்தியாவோட பி.எம். ஆகி தனி ஈழம் வாங்கித் தருவேன்’ என்று உதார்விடும் சிறுவன் என ஒரு கிராமத்தில் இருக்கும் வெவ்வேறு பாத்திரங்களை முன் பாதிப் படத்தில் உலவவிட்ட விதத்தில் இயக்குநரின் திறமை வெளிப்படுகிறது. அதே நேரம் பல வசனங்களும் சில கதாபத்திரங்களும் துருத்திக் கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
நடித்து, படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அஜய். சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்களையும், பாலியல் வன்முறைகளையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியதோடு, புலிகள் தரப்பின் தவறுகளையும் விமர்சனங்களாகப் பதிவு செய்திருக்கிறார். உலகெங்கும் தஞ்சம் தேடி ஆபத்தான கடல் பயணத்தில் ஈடுபடும் ஈழ மக்களின் அவலத்தை கண் முன்னே நிறுத்தியிருப்பதுதான் படத்தின் நோக்கம்.
படம் முடிந்த பின்னர் பேசிய சத்யராஜ், ”தமிழ் மக்களின் வலியைப் பேசுகிற இந்தப் படத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்” என்றார்.
தமிழருவி மணியன் பேசும்போது, ”சொந்த மண்ணில் வாழ முடியாமல் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரத்தை நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளலாம் என்று வருகிற ஈழ மக்களின் கடல் அவலத்தை இது போல இன்னொரு படம் பேசியதாக எனக்குத் தோன்றவில்லை.
இது படமல்ல; ஈழத் தமிழர்களின் கண்ணீர். இந்தப் படத்தைப் பார்த்த பின்னரும் ஈழ மக்களின் பிரச்சினையில் பாராமுகமாக இருக்க முடியாது என்றார்.
2009 – ஏப்ரலில் 20 பேரோடு ஈழத்திலிருந்து தமிழகம் நோக்கிப் புறப்பட்ட படகு திசை மாறி காக்கிநாடா சென்று சேர்ந்தபோது 10 பேர் இறந்து போனார்கள். இது உண்மைச் சம்பவம். நெஞ்சைப் பிழிகிற கதைகளை அஜய் அற்புதமாக இணைத்திருக்கிறார்.
இந்தப் படம் ஒரு வரலாற்றுக் காவியம். கொடூரமான இந்த உண்மையை உலகம் கண் கொண்டு பார்க்கட்டும் என்றார் வைகோ.
இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த சோகங்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கலங்க வேண்டியிருக்குமோ?
ராவண தேசம்’ படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் அஜய் நூத்தகியின் சொந்த ஊர் குண்டூர். இப்போது வசிப்பது ஹைதராபாத். அவரது தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. அப்பா இராணுவத்தில் பணி செய்தவர். 2009-ல் போர் நடந்த போது காக்கிநாடாவுக்கு வந்த படலில் ஈழத் தமிழர்கள் சிலர் கரை ஒதுங்கிய போது 10 பிணங்கள் அதில் இருந்ததை அறிந்து வேதனையடைந்தார். அப்போதே அதில் பாதிக்கப்பட்ட அஜய் அவர்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டு இந்தக் கண்ணீர் காவியத்தை உருவாக்கினராம். 32 வயதாகும் அஜய் நூத்தகிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஈழம் தொடர்பில் எதை படித்தாலும் இப்போதெல்லாம் என் கண்கள் கசங்குது ……வேதனை நெஞ்சை பிழிகிறது. …..இன்னும் நம்பிக்கை இருக்கு தமிழ் ஈழம் மலரும் என்று……….