தகுதியுடையவர்கள் இருந்தால் சென்சார் போர்டு சிறப்பாக செயல்படும்: கமல்ஹாசன்

kamalசென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட துவக்க விழாவில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அமீர்கான், கமல்ஹாசன், நடிகை சுஹாசினி.

சென்சார் போர்டில் தகுதியுடைவர்கள் இருந்தால் அது சிறப்பாக செயல்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

11-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் வியாழக்கிழமை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக இயக்குநர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். கேள்விகளை நடிகர் சுஹாசினி கேட்க அதற்கு அவர் அளித்த பதில்:

நடிகை ஸ்ரீபிரியா: “வீரபாண்டிய கட்டபொம்மன்’, “கப்பலோட்டிய தமிழன்’, “கர்ணன்’ ஆகிய படங்களில் எந்தப் பட ரீமேக்கில் நடிப்பீர்கள்?

கமல்ஹாசன்: எந்த வேடம் என்று சொல்லவில்லையே? “கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் நடிப்பதாக இருந்தால் சுப்பிரமணிய சிவா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்.

ஸ்ரீபிரியா: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் பரிசாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பீர்களா?

கமல்: ரசிகர்களாகிய உங்களுக்கு அது பரிசு. எங்களுக்கு? நான் தயார். ரஜினி தயாராக இருக்கிறாரா என கேட்க வேண்டும். அவருடைய வசதி எப்படியோ?

ரமேஷ் அரவிந்த்: “தூம் 3′, “விஸ்வரூபம் 2′ சாத்தியமானது; அது போல கமல்ஹாசன் – 2, சச்சின் டெண்டுல்கர் சாத்தியமா? அடுத்த சச்சின், விராட் கோலி என்பது போல்…?

கமல்: நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தலைமுறைகளும் மாறி வருகின்றன. என் சுயநலத்தில் அது தெரியாமல் போகலாம். ஆனால் இருக்கிறார்கள் என்பது உண்மை.

ரமேஷ் அரவிந்த்: சினிமா நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டு இருக்கிறது; 133 வருடங்களுக்கு முன்பு வந்த கேமிரா இப்போது இல்லை; சினிமாவில் கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனவே?

கமல்: கருவிகள்தான் மாறும். கலை மாறாது.

சூர்யா: உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குநராக உருவெடுக்க பின்னணி சக்தி என்ன?

கமல்: கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இயக்குநர் ஆர்.சி. சக்திதான் காரணம்.

சூர்யா: நாளுக்கு நாள் சினிமாவை நேசிக்க உங்களை இயங்க வைக்கும் சக்தி எது?

கமல்: ஒரு காலத்தில் உலக சினிமாக்களை பார்ப்பது கனவாக இருந்தது. பாலுமகேந்திரா மாதிரியான ஆள்கள் பார்த்து விட்டு வந்து சொல்லுவார்கள். அந்தப் படத்தை கற்பனை ஓட்டத்திலேயே எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். தேசிய விருது, சில்வர் ஜூப்ளி எல்லாம் சாத்தியமானது அப்படித்தான். எல்லாமே தேடி தேடிப் போய் கற்றவை. பல விஷயங்கள் கேள்வி ஞானத்தால் தெரிந்து கொண்டவை. இது மாதிரியான விழாக்களை சர்வதேச படங்களை பார்க்க பயன்டுத்திக் கொள்ள வேண்டும்.

இளையராஜா: உலக சினிமாக்களோடு தமிழ் சினிமா ஒட்டவில்லையே..?

கமல்: தமிழ் சினிமாவுக்கு ஒன்றரை கண். கண்ணாடி போட்டால் சரியாகிவிடும்.

கவிஞர் நா. முத்துக்குமார்: இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறதே..?

கமல்: பாலம் அமைக்க யாருமில்லை. எழுத்தாளர் பாலகுமாரனோடு இதைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பே பேசியிருக்கிறேன். ஒலிச்சித்திரம் மூலம் கேட்கப்படும் ஒரு சினிமா புரிகிறதென்றால் அது நல்ல சினிமா அல்ல என்று பாலுமகேந்திரா அடிக்கடி சொல்லுவார். ஒலி ஓசைகளால் நிரப்படுவது அல்ல சினிமா. ஷேக்ஸ்பியர் இப்போது வந்தாலும் தற்போது சினிமா சூழலுக்கு ஏற்ப திரைக்கதை அமைக்க கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.

பாலுமகேந்திரா: கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் எடுத்து அனுப்பப்படும் படங்களை இங்கே வாயைப் பிளந்து பார்க்கிறோம். நம் படங்களை அவர்கள் வாயைப் பிளந்து பார்ப்பது எப்போது? “பதேர் பஞ்சாலி’ இன்னும் சர்வதேச அளவில் இடம் பிடித்திருக்கிறது; தமிழர்களாகிய நம்மால் ஏன் உலக சினிமாவில் கலக்க முடியவில்லை?

கமல்: 35 வருடங்களுக்கு முன்பே இதைப் பற்றி உங்களிடம் (பாலுமகேந்திரா) பேசியிருக்கிறேன். “”என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது நீ நடிக்கிறாயா?” என கேட்டீர்கள். அடுத்த இரண்டு வருடங்களில் அதை எடுத்து விட்டோம். அதுதான் “கோகிலா’. பாலுமகேந்திராவால் உருவானவர்கள் நிறைய பேர். அதில் நானும் ஒருவன். அவரின் தோள் மீது கை போட்டு சினிமா கற்று கொண்டவன் நான்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: தற்போதைய சென்சார் போர்டு திருப்தியளிக்கிறதா..?

கமல்: ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தங்களது ஆள்கள் அங்கே இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். சினிமாவை நேசிக்க தெரிந்த ஆள்கள் அங்கே சுதந்திரமாக இல்லை. தகுதியுடைவர்கள் அங்கே இருந்தால் சென்சார் போர்டு இன்னும் சிறப்பாக செயல்படும் என்றார் கமல்ஹாசன்.