ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்: கமல் பேட்டி

kamal_suhasiniசென்னையில் நேற்று நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நிகழ்ச்சியாக நடிகை சுஹாசினி, கமல்ஹாசனை விழா மேடையில் பேட்டி கண்டார். அதில் சில முக்கியமான கேள்வி பதில்கள் வருமாறு:

சுஹாசினி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களை ரீமேக் செய்தால் எந்தப் படத்தில் நடிப்பீர்கள்?

கமல்:
கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்பிரமணியம் சிவா கேரக்டரில் நடிப்பேன். காரணம் அந்த வேடத்தில் எங்கள் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் என்றால் ஜாக்சன் துரையாக நடிப்பேன். தசாவதாரம் படத்தில் ப்லெட்சராக நடித்த அனுபவம் இருக்கிறது.

சுஹாசினி: இந்திய நூற்றாண்டின் சினிமா பரிசாக நீங்களும் ரஜினியும் இணைந்து நடிப்பீர்களா?

கமல்:
நாங்கள் இணைந்து நடித்தால் உங்களுக்கு பரிசுதான். எங்களுக்கு….?. இரண்டுபேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர்கள் கிடைப்பது சிரமம். வேண்டுமானால் பிரீயாக நடிக்கலாம். நான் ரெடி, ஆனா அவர்(ரஜினி) எப்படின்னு எனக்குத் தெரியாது.

சுஹாசினி: கிரிஷ்-2, தூம்-2, விஸ்வரூபம்-2 மாதிரி கமல்-2, சச்சின்-2 வருவார்களா?

கமல்: வந்திருக்கலாம். என் சுயநலம் காரணமாக அவர்கள் என் கண்களுக்கு தெரியாமல் இருக்காலம். நிச்சயம் வருவார்கள் எங்களை விட திறமையானவர்களால் சினிமா நிறையும்.

சுஹாசினி: தணிக்கை குழுவிற்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லையே…?

கமல்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவை தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை திணிப்பதை தவிர்க்க வேண்டும்.

சுஹாசினி: உங்களை இயக்குனராக தூண்டிய சக்தி எது?

கமல்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. என் அம்மாகூட நான் இயக்குனராவேன்னு நம்பியதில்லை. அதை நம்பியவர் ஆர்.சி.சக்தி. அவர்தான் என்னை தூண்டிய சக்தி.

சுஹாசினி: உலக சினிமா தரத்துக்கு நாம் ஏன் இன்னும் உயரவில்லை?

கமல்: இதற்கு நான் மட்டும் அல்ல எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும். பாலுமகேந்திரா போன்றவர்கள் அந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு நாமும் இணைய வேண்டும். சினிமாவுக்கு வருகிறவர்கள் நிறைய உலக படங்களை பார்க்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காப்பி அடிக்க கூடாது.

சுஹாசினி: சினிமாவுக்கும், இலக்கியத்துக்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறதே?

கமல்: இரண்டுக்கும் இடையில் பாலம் அமைக்க 40 வருடத்துக்கு முன்பே முயற்சி செய்தேன். கேரளாவிலும், வங்கத்திலும் அது சாத்தியமாகியிருக்கிறது. இங்கும் சாத்தியப்பட வேண்டும். நிறைய இலக்கிய வாதிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அது இன்னும் அதிகமாக வேண்டும்.