சென்னை தியாகராய நகரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை செய்தனர். இது குறித்த விவரம்:
வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வருமான வரித்துறை அண்மைக்காலமாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் பல கோடி பணமும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் லயன் டேட்ஸ் நிறுவனம், சரவணபவன் ஹோட்டல், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் அடுத்தடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக நடிகர் சந்தானம், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சுமார் 30 இடங்களில் நடைபெற்ற இச் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை செய்தனர்.
தியாகராய நகர் கலிபுல்லா சாலையில் உள்ள அலுவலகத்துக்கு காலை 9 மணியளவில் வந்த வருமான வரித்துறையினர் நள்ளிரவு வரை சோதனை செய்தனர். புதன்கிழமையும் இச் சோதனை நீடிக்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் சில ஆவணங்கள் பிடிபட்டதாலும் வருமான வரி முறையாக கட்டப்படவில்லை எனவும் வந்த தகவலின் அடிப்படையில் இப்போது இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.
இச் சோதனையில் புகார் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்போது விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கும் “ஜில்லா’ திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடதக்கது.