நான் ரஜினியின் தீவிர ரசிகன்

cineநான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

யஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள “தூம்-3′ திரைப்படம் வரும் 20-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது. அமீர்கான், அபிஷேக் பச்சன், கேத்ரினா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார். படம் வெளியாவதையொட்டி, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமீர்கான் கூறியது:

“தூம்-3′ படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகவுள்ளது. முதல் முறையாக நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரசிகர்களுக்கும் எனக்கும் இது நல்ல அனுபவமாக இருக்கும். நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ரஜினியின் ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ரசிகனாக இருக்கும்போது சினிமாவில் அறிமுகமானேன். அந்த சமயத்தில் “ஆதாங் கி ஆதாங்’ படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் ரஜினிகாந்தின் நேரம் தவறாமை, மனித நேயம் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் வியப்பாக இருந்தன. அதன் பிறகு அவர் மீது மேலும் மரியாதை கூடிவிட்டது.

கஜினி ரீமேக்கின்போது, அந்தப் படத்தில் நடிப்பதில் எனக்கு அச்சம் இருந்தது. ஏனென்றால், அதற்கு முன் பழிவாங்கும் கதையில் நடித்த அனுபவம் எனக்கு இல்லை. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாதான் எனக்கு தைரியம் தந்தார். அவருக்கு நன்றி.

சமீபத்தில் இயக்குநர் பாலசந்தரை சந்தித்தது பற்றி கேட்கிறார்கள். நான் முதன்முதலாக இயக்கிய “தாரே ஜமீன்பர்’ படத்துக்காக ஒரு தனியார் அமைப்பு விருதினை பரிந்துரை செய்திருந்தது. விருது அளிப்பு மேடையில் பேசிய இயக்குநர் பாலசந்தர் என்னை வெகுவாக உயர்த்தி பேசினார். அவர் பேசிய விதம் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பேச்சு எனக்கு கண்ணீரை வரவழைத்தது. அதனால் அவரை சந்திக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே இந்தச் சந்திப்பு நடந்தது. பாலசந்தருடன் நடந்த சந்திப்பால் “உன்னால் முடியும் தம்பி’ ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வருகின்றன. அவை வெறும் வதந்திதான். தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது. அதனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. “தூம்-3′ தமிழில் வெளியாக உள்ளது. என்னை அதிகம் தெரியாத தமிழர்களிடத்தில் இந்தப் படத்தின் மூலம் ஒரு புதுமுக நடிகனாக அறிமுகமாவதை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

இந்த சந்திப்பின்போது படத்தின் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, நடிகர்கள் உதய் சோப்ரா, அபிஷேக் பச்சன், நடிகை கேத்ரினா கைஃப் ஆகியோர் உடனிருந்தனர்.