உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் “உப்புமா கிண்டுவார்கள்… கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் “பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், “பிரியாணி, வெங்கட்பிரபுவின், “டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். “பசி – ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு “பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!
கதைப்படி சுகன் – கார்த்தியும், பரசுராம் – பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ… கார்த்தி மட்டும்தான்…)வது தான் “பிரியாணி படத்தின் மொத்தகதையும்!
சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, “சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி – பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!
ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!
பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் “வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று “பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!
பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய “லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!
வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் “லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், “மிசிசிபி… பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ… ஹீ…!!
சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து – இயக்கத்தில் “பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து “பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!
மொத்தத்தில், “பிரியாணி, “பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் “குஸ்கா!