நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கி நடித்திருக்கும் தலைமுறைகள் படத்துக்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.
ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட படத்தின் வியாபாரம் இரண்டு கோடியை தாண்டி இருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் சசிகுமார். இந்த சந்தோஷத்தில் அவர் கூறியது:
லாப நோக்கத்திற்காக தலைமுறைகள் படத்தை தயாரிக்கவில்லை. பாலுமகேந்திராவின் சினிமாக்களை பார்த்து இயக்குனராக வேண்டும் என்று வந்தவர்களில் நானும் ஒருவன். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து சந்தோஷமும், பெருமையும் கொள்கிறேன். அவரே என் அலுவலகம் வந்து கதை சொல்லி தயாரிக்க கேட்டபோது வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது.
தலைமுறைகள் நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், கிராமத்தையும் அடுத்து தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்கும் பதிவாக அமைந்திருப்பதில் ஒரு தயாரிப்பாளனாக பெருமைப்படுகிறேன். ஒரு காட்சியில் என்னையும் நடிக்க வைத்து பெருமைப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி. ஈரான், கொரிய சினிமாக்களை பார்த்து நாம் வியப்பதைபோல நமது சினிமாவை பார்த்து அவர்கள் வியக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்பதையே தலைமுறைகள் காட்டுகிறது என்றார்.