அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி, 2 பேர் கோடிக்கணக்கில் தன்னை மோசடி செய்து விட்டதாக இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் கூறுகையில், எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள ‘லவ் ஆந்தம்’ என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக் காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி பாடகர் ஏகானை அவர்கள் ‘புக்’ செய்து தரவேண்டும், முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும், ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை.
இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலரை (ரூ.1 கோடி) திருப்பிக் கேட்டேன்.
ஆனால் அவர்கள் திருப்பி தராமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன்.
இதன் பிறகுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழி என எனக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையே வேறு சிலரையும் இதே போல் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மோசடி செய்துவிட்டு எங்கே ஓடிவிடப் போகிறார்கள்? இந்த மோசடிக்காரர்கள் உலகம் பூராவும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்!