‘புத்ரன்’ படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் தவிப்பு

jayabarathiசென்சார் ஆன “புத்ரன்’ படத்தை வெளியிட முடியாததால், மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடப் போவதாக சினிமா இயக்குநர் ஜெயபாரதி (படம்) தெரிவித்தார்.

“குடிசை’ படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜெயபாரதி. பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து படம் எடுக்கும் முறையை 1979-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர். மாணவர்களிடம் 90 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்து இந்த படம் எடுக்கப்பட்டது.

ஜெயபாரதி இதுவரை ஊமை ஜனங்கள், கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் உள்பட 7 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கி, தயாரித்துள்ள படம் “புத்ரன்’. குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஆனால், புத்ரன் படத்தை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை. முன்னோட்டக் காட்சியை பார்க்கக்கூட யாரும் முன்வரவில்லை என்கிறார் ஜெயபாரதி.

எனவே, சமுதாயக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் இயக்குநர் ஜெயபாரதி.

இதற்காக ஜனவரி 3-ஆம் தேதி முதல் சென்னையில் இருக்கும் 20 கல்லூரிகளின் மாணவர்களைச் சந்தித்து நிதி திரட்ட உள்ளார்.

ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் நன்கொடை அளிக்கும் மாணவர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரியின் பெயரை டைட்டில் கார்டில் போட முடிவு செய்துள்ள அவர், நன்கொடை அளிக்கும் மாணவர்கள் விரும்பிய திரையரங்கில் படம் பார்க்க ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.