மன்சூரலிகான் தலையில் பற்றி எரிந்த ‘தீ’

1ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கும் படம், அதிரடி.

இதில் மிதிலா உட்பட மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். படத்தின் ஐந்து பாடல்களையும் எழுதி இசையமைக்கிறார், மன்சூரலிகான். சென்னையிலும் அதன் கூவம் சார்ந்த பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் தலைப்புக்கேற்றார்ப்போல் 3 அதிரடி சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன.

இதன் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, ஜி.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் சாகசங்கள் மேற்கொண்டார் மன்சூரலிகான். தொடர்ச்சியாக 50 முட்டைகளை சாப்பிட்ட அவர், தன் வயிற்றின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து, அதை சம்மட்டியால் உடைக்கும் சாகசத்தை செய்தார். பிறகு ஓடுகளை காலாலும் பீர் பாட்டில்களை கையாலும் உடைத்தார்.

தொடர்ந்து ஓடுகளின் மீது நெருப்பு பற்ற வைத்து, அதனை கையாலும் தலையாலும் உடைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலையில் தீப்பிடித்தது. உடனே உதவியாளர்கள் ஓடிவந்து, கோணிப்பையை அழுத்தி தீயை அணைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டின் முதல் தொடக்க விழா என்பதால் சாகச நிகழ்ச்சி நடத்தினேன் என்றும் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள், முத்து மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார் எனவும் கூறியுள்ளார்.