இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
“போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.
இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார்.
மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
அதை விட நடிக்கும்போது அந்த கதாப்பாத்திரத்தின் வலிகளை என்னால் உணர முடிந்தது.
படப்பிடிப்பு தளம் அனைத்தும், உண்மையான ஒரு போர்க்களத்தைப் போன்றே எனக்கு தெரிந்தது. சில இடங்களில் என்னையும் அறியாமல் அழுதிருக்கிறேன்.
நடிக்கும் எனக்கே இப்படியென்றால் உண்மையில் அந்த கொடுமைகளை அனுபவித்த இசைப்பிரியாவும், அந்த மக்களும் எவ்வளவு வலிகளைத் தாங்கியிருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் எனக்கு உணர்த்தியது என்றார்.
தன்னை எல்லோரும் இசைப்பிரியா என்றே அழைப்பதால், இப்போது யார் தன் பெயரைக் கேட்டாலும் இசைப்பிரியா என்றே அனு கூறிவருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அவரது குரலில் இசைப்பிரியா பற்றி ஒலிக்கும் ஒரு பாடலை கேட்டு படக்குழுவினரே கண்கலங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.