உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் 2 மணிநேரம், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விதத்தில் நல்லதொரு விழிப்புணர்வு மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘அகடம்’
போலி மருந்துகளின் போக்கிரி தனங்களாலும், மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் அதை தயாரிப்பவர்களின் பொல்லாத குணங்களாலும், தன் குழந்தையையும், குடும்பத்தையும் அநியாயமாக இழக்கும் ஹீரோ, தன் மனைவியின் ஆவி உதவியுடன், போலி மருந்து பொறுக்கிகளின் கதையை முடிக்கும் கதை தான் ‘அகடம்’ படத்தின் கையடக்க கரு, கதை, களம் எல்லாம்!
கதாநாயகர் தமிழ், போலி மருந்து தயாரிப்பாளர்களின் கூட்டாளியாகவே களம் இறங்கி, தன் மனைவி பாத்திமா எனும் ஸ்ரீபிரியங்காவின் உயிரற்ற உடலுடனும், உயிரோட்டமான ஆவியுடனும் கயவர்களை பயமுறுத்தி பழிதீர்க்கும் காட்சிகள் திக் திக் திகில் காட்சிகள்!
கதையின் நாயகி பாத்திமாவாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா கை குழந்தையுடன், ஆவியாக அசால்ட்டாக பயமுறுத்தியிருக்கிறார். சஞ்சய்-பாம்பே பாஸ்கர், ஜான் – ஸ்ரீனிஐயர், அசோக்-கலைசேகரன், பிச்சை பெருமாள்-சவரண பாலாஜி, குழந்தை அப்துல் கலாமாக வரும் மாஸ்டர் அஜெய், விலைமாதுவாக வரும் அனிஷா உள்ளிட்ட அனைவரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பலே, பலே!
கே.பாஸ்கரின் பின்னணி இசை, இ.ஜே.நவுஷத்கானின் ஒளிப்பதிவு, இசட்.முகமது கிஷாக்கின் இயக்கம் எல்லாம் சேர்ந்து சில காட்சிகளை ‘ஜவ்’வாக இழுத்தாலும், நல்ல ‘மெடிக்கல் மெசேஜ்’ உடன் சிறந்து நிற்கும் ‘அகடம்’, புதிய முயற்சிக்கு ‘மகுடம்!’