அஞ்சலி தேவி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

actress_anjali_deviமறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவிக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

பழம்பெரும் திரைப்பட நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான அஞ்சலி தேவி உடல்நலக் குறைவு காரணமாக 86 வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

நாடகத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அஞ்சலி தேவி, இயக்குநர் பி.புல்லையாவால் “கொல்லபாமா’ என்னும் தெலுங்கு படத்தில் மோகினி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

“கணவனே கண்ட தெய்வம்’ என்ற திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த பெருமையும் அவருக்கு உண்டு.

அஞ்சலி தேவியின் மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மட்டுமல்லாமல் எனக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.