எனக்கு அரசியல் தலைவரையோ, சினிமா நட்சத்திரங்களையோ புகைப்படம் எடுக்க விருப்பமில்லை. அப்படிப்பட்ட நான் என் அம்மாவை புகைப்படம் எடுத்தது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.
திருவண்ணாமலை பயணங்களின் போது சாலையோரக் காட்சிகளை தன் கேமிராக்களால் படமாக்குவது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிடித்தமான ஒன்று. 1978-ஆம் ஆண்டிலிருந்து சாலை வழிப் பயணங்களின் போது தன்னை கவர்ந்திழுத்த சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான காட்சிகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சில புகைப்படங்கள் சென்னை, போயஸ்கார்டனில் உள்ள ஒவிய கண்காட்சி வளாகத்தில் “நான் பார்த்தபடி…’ என்ற பெயரில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த இக்கண்காட்சியை இயக்குநர் பாலுமகேந்திரா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் பார்த்திபன், விவேக், கவிஞர் மு.மேத்தா, அறிவுமதி உள்ளிட்ட பிரபலங்களுடன் ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.
வரும் புதன்கிழமை (ஜனவரி 22) வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் திங்கள்கிழமை இளையராஜா கூறியது:
நீண்ட பயணங்களின் போது எனக்குள் தோன்றிய விஷயம்தான் இந்த புகைப்படங்கள். பெரிய மெனக்கெடல்கள் எதுவுமில்லாமல் இந்த படங்களை எடுத்திருக்கிறேன். ஏனென்றால் குறிப்பிட்ட படங்களுக்காக மெனக்கெடுவதற்கு எனக்கு நேரம் இல்லை. இதுவரை எடுத்தப் படங்களில் மனம் கவர்ந்தவற்றைதான் காட்சிக்கு வைத்திருக்கிறேன். இந்தப் படங்களை எடுக்கும் போது இருந்தவற்றை விட அதை புகைப்படங்களாக பார்க்கிற போதுதான் அரிதான உணர்வுகள் ஏற்படுகின்றன.
என் அம்மாவை புகைப்படம் எடுத்தது மறக்க முடியாத தருணம். உடல் நலம் இல்லாமல் இருந்த போது, ஊசிக்கும், மாத்திரைக்கும் பயந்தார். அப்போது இதற்கு போய் பயப்படலாமா என்று சொல்லி அவரை ஒரு புகைப்படம் எடுத்தேன்.
என் புகைப்படங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் யாரும் இல்லை. பாராட்டியவர்கள் நிறைய பேர். இசையமைப்பாளருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று இதை பார்த்துவிட்டு ஒரு சிலர் கேட்கக் கூடும். இசையே வேண்டாத வேலை தானே. புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் விளைவாக எந்த கேமிரா புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தாலும் அதை உடனே வாங்கி, புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
டிஜிட்டல் கேமரா வந்தபிறகு புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்தி விட்டேன். காரணம் டிஜிட்டல் கேமரா போட்டோகிராபிக்கு அழகல்ல, டிஜிட்டல் கேமராவில் சரியான தரம் இருக்காது. ஆனால் சினிமாக்காரர்கள் இப்போது டிஜிட்டலில்தான் படமே எடுக்கிறார்கள். நல்ல விஷயங்களைத்தான் நாம் கைவிட்டு விடுவோமே.
என் புகைப்படங்களை நான் பிரிண்ட் போட கொடுக்கும் போது அதன் அளவுகளை கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிடுவேன். மேலும் இயற்கையான வண்ணங்களை கூட்டவோ, குறைக்கவோ அனுமதிக்க மாட்டேன்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்து கோயிலுக்குச் சென்று படம் எடுத்துக் கொண்டிருந்தேன். கோயில் வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, வறுமையின் பிடியில் சிக்கிய நிலையில் இருந்த ஒரு குழந்தையை பார்த்தேன். அக்குழந்தையை படம் எடுக்க வேண்டும் போல் தோன்றியது. படம் எடுத்து முடித்த பின்னர் அக்குழந்தைக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் போல் தோன்றியது. குழந்தையை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அக்குழந்தையிடம் ஒரு தெய்வீகத்தன்மை இருப்பதை உணர்ந்தேன். ஆனால் இந்நாள் வரை அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமையிலும் சினேகம் பூத்து இருந்த அந்த குழந்தையின் முகத்தை புகைப்படமாக இப்போது பார்க்கும் போதும் ஏதோ உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து போகிறது.
சினிமா ஒளிப்பதிவில் எனக்குப் பிடித்தமான கலைஞர்களான பி.சி.ஸ்ரீராம், பாலுமகேந்திரா ஆகியோர் இந்தப் புகைப்படங்களை பார்த்து மனம் திறந்து பாராட்டினர். புகைப்படம் எடுக்க ஆசைப்படும் தலைவர், நடிகர் குறித்தெல்லாம் கேட்கிறார்கள். அப்படி ஒருவரும் கிடையாது. அதில் எனக்கு விருப்பமில்லை.
இந்த ஆர்வத்தை வைத்து சினிமாவில் ஒளிப்பதிவு செய்வது குறித்து கேட்கிறார்கள். சினிமாவுக்கு போய் விட்டால் கண்டதையும் எடுக்க நேரிடும். அதனால் அதில் எனக்கு நாட்டமில்லை என்றார் இளையராஜா.