எல்லார் மூக்கிலேயும் அரசியல்

aru nagappanமுனைவர் ஆறு. நாகப்பன், ஜனவரி 26, 2014.

 

ஒரு ஊர்ல பத்தே பத்து பேர்தான் இருந்தாங்க. அதாவது பத்துக் குடும்பத்துக்கு பத்துத் தலைவருங்க. அந்த பத்துப் பேருக்கு என்ன பேருங்கிறது முக்கியமில்ல. அந்த ஊருக்கு ஒத்த ஊருன்னு பேரு. அதான் முக்கியம். ஒவ்வொரு தலைவருக்கும் மூணு மூணு பசங்க. யாரும் பள்ளிக் கூடத்துக்குப் போகல. ஏன்னா, பள்ளிக்கூடம் ஒத்த ஊருக்கு எதிர்ப்பால இருந்த ஊருல இருந்துச்சி. குறுக்கால ஒரு ஆறு. ஆத்தப் பாத்துப் பாத்து பயந்து யாரும் பள்ளிக்கூடம் போனதில்ல.

 

இப்படி இருக்கிற காலத்தில பத்துப் பேருல ஒருத்தனுக்குக் கொஞ்சம் புத்தி வந்திச்சு. எங்கிருந்துன்னு கேக்காதீங்க. சொந்தமா வந்திச்சின்னு வச்சிக்குங்க.  அவன் தான் பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பனும்னு ஆசைப்பட்டான். எல்லார் கிட்டேயும் பேசினான். இன்னொருத்தனுக்கும் புத்தி வந்திருச்சி. ஆத்துக்குக் குறுக்கால ஒரு சின்ன பாலம் போட்டா பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகலாமேன்னு சிந்திச்சாங்க.

 

ரெண்டு பேரும் சேர்ந்து மத்த எட்டுப் பேரைக் கூப்பிட்டுக் கதைய சொன்னாங்க. ஒருத்தன் அதெல்லாம் வேண்டாம்னான். அவன் அந்த ஒத்த ஊருக்குத் தன்னையே ராஜான்னு சொல்லிக்கிட்டான். கையில ஒரு மூங்கில் தடிய வச்சி சொழட்டிக்கிட்டு தெருவில நடப்பான். அவனுக்குப் பயந்து மத்தக் குடும்பமெல்லாம் அவனுக்கு வரி கட்டிக்கிட்டு இருந்தாங்க.

 

அவனுக்கும் ஒரு அல்லக்கை. ராஜாவோட எச்சித் தட்டுல கெடக்கிற எலும்புத் துண்டுக்காக அவன் கூடவே ஒட்டிக்கிட்டுக் கெடப்பான். ‘பாலம் கீலமெல்லாம் வேண்டாம். அதான் ஐயா சொல்லிட்டாங்கல்லே’ என்று அல்லக்கை வேலயக் காட்டினான்.

 

ரெண்டும் ரெண்டும் நாலு போச்சா. மிச்சம் ஆறு பேர் குனிஞ்ச தல நிமிராம நின்னானுங்க. ‘நமக்கு ஏன் ஊர் வம்பு, இருக்கிறத வச்சி சந்தோஷமா இருக்கலாந்தானே’ன்னு அவங்க மனசில ஓட்டம். ஒரு ஒழைப்பும் இல்லாம ஊரார் வேர்வையில ஒடம்ப வளத்த ராஜாவுக்கு மனசில லேசா பயம் வந்திருச்சி.

 

தன்னைத் தானே ராஜான்னு சொல்லிக்கிறத விட நாலு பேர வச்சி சொல்லச் சொல்றது நல்லதுன்னு நெனைச்சான். ரெண்டு பேரா இருக்கிற கூட்டத்த பெருசாக்கனும். அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சான். ரெண்டும் ரெண்டும் இல்லாம நடுவுல நின்ன ஆறு பேர தான் பக்கம் சேக்கனும்னு முடிவு பண்ணினான்.

 

கொஞ்சம் பயந்தாங்கொள்ளியாவும் காசுக்கு ஆசைப்பட்டவனும் அந்த ஆறு பேர்ல எவன்னு தேடினான். ஒருத்தன் கெடைச்சான். இவன் பக்கம் மூனு பேர் ஆனதும் அவுங்கள வச்சி எல்லாரையும் கூட்டி ராஜா வாழ்கன்னு சொல்ல வச்சான். புத்திசாலிங்க ரெண்டு பேரும் உங்கள நாங்க ராஜாவா ஏத்துக்க முடியாதுன்னாங்க. இருந்தாலும் அவுங்க ரெண்டு பேரு,  இந்தப் பக்கம் மூனு பேரு. ராஜா முடி சூட்டிக்கிட்டாரு.

 

அப்பவும் நடுவுல அஞ்சி பேரு. நமக்கு ஏன் ஊர் வம்புன்னு வரி கட்டிக்கிட்டே இருந்தாங்க. ஒத்த ஊரு ஒரே ஊருங்கிற பேருல அமைதிப் பூங்காவா இருந்துச்சி.