தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின் மொத்த கதையும்!
அதாகப்பட்டது ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி – கிஷோர், சித்தப்பா – பாண்டி, குட்டிமணி – முருகேஷ், சேட்டு – ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி – சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.
ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.
கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நால்வரும் பேஷ், பேஷ்!
சாந்தினி – யாமெனி, ஏடிஎம் – ஸ்ரீநிதி, ஆச்சி – சுஜாதா, நாயுடுவின் மனைவிகள் மீனாள் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
சிறுவர்களுக்கு உதவும் மந்திராவாதி(சும்மா பெயரில் மட்டும் தான்…) – இமான் அண்ணாச்சி, கோயம்போடு மார்க்கெட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாயுடு – மது, அவரது மைத்துனர் மயிலாக வரும் ஆர்.கே., விஜய் முருகன் (இவர் இப்படத்தின் கலை இயக்குநராகவும் பட்டையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது…) உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கோயம்பேடு வாசிகளாகவே கோலோச்சி இருப்பது கோலி சோடாவின் பெரும் பலம்!
அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க… என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி – இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை… பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை… என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது. காரணம் வசனகர்த்தா இயக்குநர் பாண்டிராஜ்! வாவ்!!
4 சிறுவர்களும் பசங்க படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரி நடித்திருப்பது, யதார்த்தமான கதையை யதார்த்தமாக முடிக்காமல், டிராமாவாக, சினிமாவாக… முடித்திருப்பது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும் எஸ்.என்.அருணகிரியின் இசைபலம், பாண்டிராஜின் வசனபலம், ஆண்டனியின் படத்தொகுப்பு பலம் உள்ளிட்ட சிறப்புகளோடு விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில்,
கோலி சோடா – பன்னீர் சோடாவாக இனிக்கிறது!!