கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி எதற்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் தயாராகியுள்ள படம் ‘இங்க என்ன சொல்லுது’.
கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் ஓட்டுனரா சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது.
சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார்.
அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு, சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.
ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார்.
ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு, மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.
ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார்.
மறுநாள் காவல் நிலையத்திலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது பொலிசில் புகார் கூறியுள்ளார்.
காவல் நிலையத்திற்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.
இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர்.
ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும், ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை.
இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.
சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம்.
‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.
திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.
பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை திரையரங்குக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.
மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஒண்ணுமே சொல்லல.
ரசிகர்ளை முட்டாளாக்கி நடிகர்கள் போடும் வேசித்தனத்தில் மீரா ஜாஸ்மீன் எப்படி இப்படி மாட்டிக் கொண்டு ஸ்டுபிட் ஆனார் ?