2000 ஏக்கர் நிலம்: சந்தேகங்களுக்கு முனியாண்டியும் வீராவும் விளக்கம் தருவார்களா?

-மு. குலசேகரன், பெப்ரவரி2, 2014.

 

m-kulasegaranபேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வாரிய இயக்குனர்களை அதிகார பூர்வமாக பேரா முதலமைச்சர் அதே ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி அறிவித்தார்.

 

இன்று வரை இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பேரா அரசிற்கு சொந்தமான பேரா அறவாரியத்தின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மந்திரி புசார் அறிவிப்புக்குப் பிறகு இந்த 2000 ஏக்கர் நிலம், பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் பத்திரிகைத் தகவல்களைப் பார்த்த பின்பு இன்னும் பல சந்தேகங்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன்.

 

ஏறக்குறைய 12 மாதங்கள் ஆகியும் இந்த நிலம் இன்னும் பெயர் மாற்றப்பட்டு குறீயீடு எண் தரப்படாததற்கு காணம் என்ன என்பதைக் கேட்க பேராவிலுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உண்டு. அதையேதான்  புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்ரமணியமும் ஆதாரபூர்வமாக கேட்டுள்ளார்.

 

இதற்கு விளக்க அளிக்க வேண்டிய பொறுப்பு இந்த அறவாரியத்தின் தலைவர் முனியாண்டியையும், இந்த அறவாரிய அமைப்பிற்கு மூலகர்த்தாவாக இருந்த முன்னாள் மந்திரி புசாரின் ஆலோசகர் வீரசிங்கத்தையும் சாரும்.

 

இவர்கள் நிர்வகிக்க எடுத்துக்கொண்ட நிலம் தனியார் நிலமுமல்ல, அவர்களின் சொந்த சொத்துமல்ல. இது சமுதாயத்தின் சொத்து. இந்திய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பேரா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒன்று.

 

அதன் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் திறந்த புத்தம் போல் இருக்க வேண்டியது அவசியம். அந்த நேர்மையும் வெளிப்படையான தன்மையும் இது நாள்வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று சந்தேகம் எழுகிறது.

 

அதன் இயக்குநர்கள் வெவ்வேறு இயக்கத்திலிருந்து வந்தவர்கள் என்று அறிவிப்பு செய்து அந்தப் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்கள்.

 

ஆனால், அவர்கள் முறையாக சம்பந்தப்பட்ட வாரியதிற்கோ, இயக்கத்திற்கோ கடிதம் எழுதி அவ்வாரியத்தின் நிர்வாகிகளிடம் இருந்து ஒப்புதல் கடிதம் எதையும் பெற்றார்களா என்று தெரியவில்லை.  

 

ஒரு வாரியத்தில் உள்ள ஓர் அங்கத்தினரை, அவ்வாரியத்தின் ஒப்புதல் இன்றி நியமிப்பது என்பது சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும்

 

அந்த தவற்றை செய்துவிட்ட பிறகாகிலும் சம்மந்தப்பட்ட வாரியத்திடம் எழுதி கேட்டு அவர்களின் ஒப்புதலை வாங்கி அந்த நியமனத்தை சரி செய்திருக்காலாம். ஆனால் இதுநாள் வரை அதுவும் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

 

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவராக இருக்கும் முனியாண்டிக்கு இந்த வழிமுறைகளெல்லாம் தெரியாதா? இதற்கு அவர் என்ன சொல்ல வருகிறார் ?.

 

எட்டு பேர் இயக்குனர்களாக இருக்கும் இந்த வாரியத்தில், அவர்கள் பதவி காலம் நிரந்தரமானதா? அல்லது சுழற்முறை நியமனமா என்ற என் கேள்விக்கு இது நாள் வரை பதில் இல்லை.

 

முதலில் அரசுப் பணியில் இருக்கும் முனியாண்டிக்கு இந்த தலைவர் பதவி தரப்பட்ட போது அது முறையாக கல்வி அமைச்சிடமிருந்து அனுமதி பெற்ற பின் கொடுக்கப்பட்ட ஒன்றா என்பதே இன்னும் மர்மமாக உள்ளது.

 

பொதுச் சொத்தை நிர்வகிக்கத் தெரியாமல் தில்லு முல்லு செய்தவர்களெல்லாம் இந்த அறவாரியத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளதால், மக்கள் இந்த நிலமும் ..கா ஹோல்டிங்ஸ் போல் குப்பையாகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அவர்களின் அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டியது அந்த நிர்வாகிகளின் கடமை. இதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

 

தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்ட வரைவை தாயரிக்க முனைவர் ராஜேந்திரன் தலைமையில் பிரதமர் குழு ஒன்றை அமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அக்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டு  அறிந்த பின்னர் வரையருக்கப்பட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்தவரை அவரின் வழிமுறைகளும் அவர் பல்வேறு அரசு/ அரசு சார இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களிடம் இருந்து பெற்ற தகவல்களையும் ஒன்று திரட்டிய விதம் மிகவும் பாராட்டுக்குறியதாக உள்ளது. தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த எந்த அமைப்பையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று அறியவருகிறேன்.

 

இப்படி ஒரு முன்னோடியாகத் திகழும் முனைவர் ராஜேந்திரனை, ஒரு இயக்குனராக கொண்டுள்ள இந்த பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம், ஏன் இன்னும் வெளிப்படையாக செயலாற்ற மறுக்கின்றது?

 

இந்த சந்தேகங்கள் தீர, பேராவிலூள்ள உள்ள அமைப்புக்களான பள்ளி வாரியத் தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், தலைமை ஆசிரியர் மன்ற உறுப்பினர்கள் போன்ற சில இயக்கங்கங்களுக்கு விளக்கமளித்தாலே போதுமானது.

 

 முனியாண்டி இதற்கு விரைவில் தக்க பதில் கொடுக்க முன் வரவில்லையென்றால் அவரை பணியில் வைத்திருக்கும் கல்வி அமைச்சிடமே நான் நேரடியாக விளக்கம் கேட்க வேண்டியிருக்கும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

வீரசிங்கமும், நெருப்புக் கோழி போல மண்ணில் தலையைப் புதைத்து எனக்கு எல்லாம் தெரியும், தான் செய்வதுதான் சரி என்ற மமதையில் இனியும் இருக்கக் கூடாது. அவர் எந்த காலக்கட்டத்திலும் பொது மக்களின் சொத்தை சிறந்த நிர்வாகத் திறனுடன் நிர்வகித்தார் என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடையாது.

 

ஆகவே,  இனியும் மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.

TAGS: