விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் சுசீந்திரன் டைரக்ட் செய்த பாண்டியநாடு இன்றுடன் (பிப்ரவரி 9) தனது 100வது நாளை நிறைவு செய்கிறது. ஒரு காட்சி இரண்டு காட்சி என்று ஒப்பேற்றாமல் நிஜமாகவே பரவலாக 100 நாட்கள் ஓடி விஷாலுக்கு வெற்றிக் கனியை பரிசாக கொடுத்துள்ளது.
சத்யம், சாய்சாந்தி, உதயம், மாயாஜால் வளாகங்களில் இப்போதும் பாண்டியநாட்டை பார்க்கலாம். வெளியூர்களில் 75 நாட்கள் வரை தாக்குபிடித்து நின்றது பாண்டியநாடு. சுமார் 7 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 30 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் விஷால், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், வெளியிட்ட தியேட்டர்காரர்கள் அனைவரும் ஹேப்பி அண்ணாச்சி.
2007ம் ஆண்டு வெளிவந்த மலைக்கோட்டைதான் விஷாலுக்கு கிடைத்த கடைசி வெற்றி. அதற்கு பிறகு வெளிவந்த சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், வெடி, சமர், பட்டத்துயானை என அனைத்துமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அவன் இவனில் அவரது நடிப்பு தேசிய விருது வரைக்கும் பேசப்பட்டது. சமர் படம் பரவலான பாராட்டை பெற்றது அவ்வளவுதான். அடுத்து நான் சிகப்பு மனிதன் வர இருக்கிறது. அது விஷாலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறதா என்று பார்க்க அவரைப்போல நாமும் வெயிட் பண்ணுவோம்.