நடிகை மீரா ஜாஸ்மினின் கணவர் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் நிச்சயித்தனர்.
திருவனந்தபுரத்தில் இன்று திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு கொச்சியிலுள்ள மீரா ஜாஸ்மினின் வீட்டில் வைத்து திடீரென இருவருக்கும் ரகசிய பதிவு திருமணம் நடந்தது.இரு வீட்டாரின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமண நிகழ்ச்சிகள் இன்று திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். சர்ச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்அனில் ஜான் டைட்டஸ் நேற்று, கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனக்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் பிப்ரவரி 12ம் திகதி திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். சர்ச்சில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் எனது மனைவி எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்னை செய்வேன் என கூறிவருகிறார். எனவே எனது திருமண நிகழ்ச்சிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க பொலிசிற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பொலிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட பதில் மனுவில், மீரா ஜாஸ்மினின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர். எனவே போதிய பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையே அனில்ஜான் டைட்டசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்றும், முதல் மனைவிக்கு தெரியாமல் இந்த திருமணம் நடைபெறுவதால் தான் அந்த பெண் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.