தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா? வேண்டாமா?

– முனைவர் ஆறு. நாகப்பன்

 

MALAYSIA-VOTE-INDIANSதமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா, வேண்டாமா என்ற இரண்டு முடிவுகளில் வேண்டாம் என்பதுதான் பாரிசான் அரசின் முடிவு. தேர்தல் என்ற ஒரு மாரடைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்துவிடுவதால் வேண்டாம் என்ற பாரிசானின் முடிவை நிதானமாக இந்தியர்களின் புத்திக்குள் திணிக்க வேண்டி இருக்கிறது. இதைத்தான் அரசு பல வியூகங்களில் செய்துகொண்டிருக்கிறது.

 

இதற்கான சான்றுகள்:

 

1.தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளைத் திட்டமிட்டே தாமதப்படுத்துவதன் மூலம் தமிழ்ப் பள்ளிகளின் இயற்கை மரணத்தை ஊக்குவித்து வருகிறது.

 

2.பந்துவான் பெனோ, பந்துவான் மோடல் என்ற வேறுபாட்டைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

முழு உதவி பெறும் பந்துவான் பெனோ பள்ளிகளும் போதுமான வசதிகளைப் பெறுவதில்லை. பந்துவான் பெனோ பள்ளிகள் அரசு நிலத்தில் இருக்கிறது என்ற ஒன்றைத் தவிர இவற்றுக்கும்  பந்துவான் மோடல் பள்ளிகளுக்கும் வசதிகளில் எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் நடைமுறை.

 

3.தோட்டப்புறங்களிலிருந்து  மக்கள் இடம் பெயரும்போது தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. அப்போது இந்தியர் குழுமி வாழும் இடங்களில் மாற்றுப் பள்ளிகள் அல்லது புதிய பள்ளிகள் அமைக்கப்படுவதே இல்லை.

 

4.இந்தியர் குழுமி வாழும் இடங்களில் உள்ள பள்ளிகளில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதை முன்கூட்டிக் கணித்துப் பள்ளிகளை விரிவாக்கம் செய்வது குறித்த திட்டங்கள் எப்போதும் இல்லை.

 

5.அண்மையில் மலாய்ப் பள்ளிகளுக்கு இல்லாத அறவாரியங்களைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அமைக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான உள்நோக்கம் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகள் மீது அரசுக்கு இருக்கும் சட்டபூர்வமான கடப்பாட்டையும் கை கழுவும் முயற்சியே இது.

 

6.தமிழ்ப் பள்ளிகளுக்குச் சூதாட்ட நிறுவனங்களைக் கொண்ட நிதி மையம் ஒன்றை அமைப்பது தமிழ்ப் பள்ளிகளைக் கை கழுவும் அரசு முடிவின் ஆகக் கடைசி முயற்சியாகும்.

 

7.தமிழ்ப் பள்ளிகள் பற்றிய அரசின் முடிவைச் செயல்படுத்தும் அதிகாரிகளாகப் பிரதமர் துறையில் இந்தியக் கல்வியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றுவது போல் பேசும் இவர்கள் உண்மையில் அரசின் முடிவை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலான மனோவியல் அணுகுமுறையிலேயே செயல்படுகின்றனர்.

 

தமிழ்ப் பள்ளிகள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தயார்படுத்துகிறோம் என்றும் தேவைகளைப் பற்றி ஆய்வுகள் செய்கிறோம் என்றும் பிரதமர் துறை அதிகாரிகள் கூறுவது இந்தியர்களை ஏமாற்றும் கலப்படமில்லாத கயமைத்தனம். மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் மலேசியாவில்தான் இருக்கின்றன. மாநில கல்வித்துறையில் எல்லாப் புள்ளிவிவரங்களும் இருக்க வேண்டும். அவற்றின் தொகுப்பு கல்வி அமைச்சில் இருக்க வேண்டும். இணையத்தில் இவற்றைப் பெற அரை மணி நேரம் போதும். அப்புறம் என்ன ஆராய்ச்சி?

 

இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட விஷயங்களையே கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடித்துப் பொதுமக்கள் காலங்காலமாக எதைக் கேட்டு வருகிறார்களோ அதையே இவர்கள் கோரிக்கையாகவும் வைக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும் பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பதும் மலேசியர் எல்லாருக்கும் தெரியும். “பந்துவான் மோடல் பள்ளிகள் விரைவில் பந்துவான் பெனோ பள்ளிகளாக மாறுவதற்கு ஆவன செய்யப்படும். இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு  நூறு மில்லியன் ஒதுக்கப்படும்.” இப்படிக் கூறப் போகும் பிரதமர்  “இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது” என்று புதிதாக ஒரு உபதேசத்தை இனி வரும் கூட்டங்களில் சொல்லுவார்.

 

மலாய்க்காரர்கள் மலாய்ப் பள்ளிகளை மேம்படுத்த அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லாத பிரதமர் இந்தியர்களைப் பார்த்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று இந்த மகா மேதாவி ஆராய்ச்சியாளர்கள் பிரதமரைக் கேட்பார்களா?

 

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் 12(1) அரசு நிதிப் பகிர்வில் மதம், இனம், பூர்வீகம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது என்று இருக்கிறது. தேசியப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக முழு உதவியும் முழு வசதிகளும் பெற்றிருக்கும்போது தமிழ்ப் பள்ளிகள் மட்டும் தனியார் நிறுவனங்களின் நிதி உதவிக்குக் கையேந்தி நிற்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று இந்த ஆய்வாளர்கள் பிரதமருக்கு அறிவுறுத்துவார்களா?

 

தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற அரசின் முடிவை பெர்காசா போன்ற மலாய் தீவிரவாத அமைப்புகள் பச்சையாகப் போட்டு உடைக்கின்றன. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இதே கருத்தை நாசுக்காக ஆய்வுச் சாயம் பூசிக் கூறுகின்றனர்.

 

இவ்வேளையில் தமிழ்ப் பள்ளிகள் மலிவுத் தொழிலாளர்களை உருவாக்குகின்றன என்றும் பள்ளியைப் பாதியில் விடுவோர் குற்றவாளிகளாக மாறுகின்றனர் என்றும் காரணம் காட்டித் தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறும் அறிவாளிகளும் இருக்கின்றனர்.

 

தமிழ்ப் பள்ளிகளின் நிலைதான் சீனப் பள்ளிகளுக்கும். சீனர்களில் 95 விழுக்காட்டுக் குழந்தைகள் சீனப் பள்ளிகளுக்குப் போகின்றனர். தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் இந்தியக் குழந்தைகள் 56 விழுக்காடு. இந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்த்தால் சீனர்களில்தான் அதிகமானோர் மலிவுத் தொழிலாளராயும் குற்றவாளிகளாகவும் இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறார்கள் அவர்கள்?

 

இந்தியர்களின் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகள் என்னும் நச்சு வளையத்தில் தமிழ்ப் பள்ளிகள் இல்லை. இதன் பொருள்: இந்தியர்களின் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் பங்களிக்கவில்லை. காலங்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவாதச் செயல்பாடுகளே அனைத்துக்கும் காரணம் என்பதைத் துணிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

அரசும் அரசின் கையாட்களும் தமிழ்ப் பள்ளிகளை மூட வேண்டும் என்னும் திட்டத்தை நமது  எதிர்வினைகளுக்கு ஏற்றவாறு செயல்படுத்துவார்கள். தமிழ்ப் பள்ளிகளை மூடக் கூடாது என்ற நமது திட்டத்தை நாமும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான கோரிக்கைகளையும் உரிமைகளையும் இந்தியர்கள் மறந்துவிட வேண்டும் என்பதும் அரசின் மறைவான நோக்கமாய் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.