தெரியாத சில விஷயங்களை மேடைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.
அந்திமழை பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் பாமரன் எழுதிய “சொதப்பல் பக்கம்’ நூல் வெளியீட்டு விழா, கோவையில் உள்ள பாரதிய வித்யா பவன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் பேசியது:
எழுத்தாளர் பாமரன் தனது நூலில் பெண் விடுதலை, காதல் திருமண உறவுகள் குறித்து எழுதியுள்ளார்.
இன்றைய சூழலில் கருப்பாக உள்ளவர்களை தாழ்த்திக் காட்டும் விளம்பரங்கள் அதிகம் எடுக்கப்படுகின்றன. ஒருசில முகப்பூச்சுகளை பூசிக் கொண்டால் கருப்பாக உள்ளவர் வெள்ளையாகி விடுவது போல காட்டப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட முகப்பூச்சை பூசினால் சருமம் வெள்ளையாகும் என்று காட்டுவதில் தவறில்லை. ஆனால் கருப்பாக உள்ளதை ஏன் விளம்பரங்களில் தவறாக சித்திரிக்கிறீர்கள்? இவ்வாறு எடுக்கப்படும் விளம்பரங்களை அரசு தடை செய்ய வேண்டும். பாமரனின் எழுத்துகளில் இவ்வாறான கேள்விகளை நாம் காணலாம்.
அதோடு, இது போன்ற மேடைகள் சில நேரங்களில் நமக்கு பள்ளிக் கூடங்களாக உள்ளன. தெரியாத சில விஷயங்களை மேடைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்பதே அதற்கு முக்கிய காரணம் என்றார். எழுத்தாளர் பாமரன் ஏற்புரையாற்றினார்.
நூலை நடிகர் சத்யராஜ் வெளியிட, எழுத்தாளர் அழகிய பெரியவன் பெற்று கொண்டார். அந்திமழை பதிப்பக நிறுவன ஆசிரியர் இளங்கோவன், நிர்வாக ஆசிரியர் அசோகன், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த விடுதலை ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, மறைந்த திரைப்பட ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.