ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘குக்கூ’.
இப்படத்தின் மூலம் ராஜுமுருகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் ஆகியோர் பார்வையற்ற காதலர்களாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவில் கமல் ஹாசன் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட சூர்யா பெற்றுகொண்டார். டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட லிங்குசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவில் சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல் சார் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் ‘சித்தப்பா’ என்றும் அழைத்திருக்கிறேன். ‘அண்ணன்’ என்றும் அழைத்து இருக்கிறேன். ‘சித்தப்பா’ என்பதைவிட, ‘அண்ணன்’ என்றால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் கூடுவதால், ‘அண்ணன்’ என்றே எப்போதும் அழைக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், ’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்தப் படத்தை தயாரித்த ‘பாக்ஸ்’ நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் எப்போதும் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை மட்டுமே நம்புபவன். சினிமா வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள். திறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும், சூர்யா செயலாலும் அதை செய்து காட்டியிருக்கிறோம். எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், ‘நீ எனக்கு மகனா?’ என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ‘இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே?’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாகவே நான் நினைக்கிறேன்..’’ என்றார்.
இயக்குனர் லிங்குசாமி பேசிய போது, இப்படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன். இந்தப்படத்திற்கு என்ன தேவையென்றாலும் என்னால் முடிந்தவரை செய்கிறேன்’’ என உணர்ச்சி பொங்கப் பேசினார்.
விழாவில் நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.