எதிர்வரும் 6 மார்ச் மலேசியா முழுவதும் இயக்குனர் பிரகாஷ் அவர்களின் ‘வெண்ணிற இரவுகள்’ வெளியீடு காண்கிறது. கடந்த 20ஆம் திகதி இப்படத்தின் சிறப்புக் காட்சியை வல்லினம் நண்பர்களுடன் காணச் சென்றிருந்தேன். ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பான அதன் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல் அனுபவம். குறிப்பாக அப்படம் முடிந்து இயக்குனர் பிரகாஷ் அவர்களுடன் கடையில் உரையாடிக் கொண்டே தேநீர் அருந்தியதும் மிக முக்கியமான தருணம். எந்த வகையிலுமே தனது சினிமாவைக் கமர்சியல் சமரசம் செய்யாமல் படத்தை வெளியிட்டிருக்கும் ஒரு திரைப் படைப்பாளியுடன் இருந்தது மகிழ்ச்சியையே அளித்தது.
தமிழ்ச்சூழலில் எத்தனையோ காதல் காப்பியங்கள் எழுதப்பட்டுவிட்டன. எத்தனையோ காதலை முன்னிறுத்திய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு கட்டத்தில் அதற்குமேல் காதலைக் கூர்மையாகச் சொல்ல முடியாதோ என்கிற தோல்வி மனநிலைக்கும் சினிமாச்சூழல் ஆளானதால் மொக்கையான காதல் படங்களே அதிகம் திரையீடுக் கண்டன. காலம் காலமாகக் காதலைக் கொண்டாடிய/கொண்டாடும் ஒரு பழக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் மீண்டும் ஒரு காதல் படைப்பை எவ்வித சலிப்பும் ஏற்படாமல் தருவதற்கு முதலில் தனித்துவமான சினிமா இரசனை வேண்டும் என்றே கருதுகிறேன். இயக்குனர் பிரகாஷ் அவர்களிடம் உள்ள துணிச்சல், வேகம், சினிமாவின் மீதான காதல் ‘வெண்ணிற இரவுகளை’ கண்டிப்பாக வெற்றியடைய செய்யும்.
படத்தின் இறுதிவரை நம்மால் அதன் திரைக்கதையுடன் மகிழ்ச்சியுடன் பயணிக்க முடிகிறது. கதை எத்துனை வித்தியாசமானதாகவும் ஆழமானதாகவும் இருந்தாலும் அதனை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது அதன் திரைக்கதை அமைப்பே. இப்படக்குழு திரைக்கதை உருவாக்கத்தில் வெகுவாகவே உழைத்திருக்கிறார்கள் ; விவாதிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. திரைக்கதை எந்த இடத்திலும் கதையின் முடிச்சுகளைக் அவ்வளவாகக் காட்டிக்கொடுக்கவில்லை. ஒரு மலேசியப் படத்தை இத்தனை சாமர்த்தியமான திரைக்கதையுடன் கொடுத்திருப்பது இதுவே முதன்முறை எனக் கருதுகிறேன்.
‘வெண்ணிற இரவுகள்’ காதலைத் தாண்டிச்செல்லக்கூடிய ஒரு மனநிலைக்கும் நம்மை ஆளாக்கும். வாழ்க்கையின் இரகசியமான ஒரு தேடலுக்குள் நுழையும் இப்படம் நாம் விட்டு வந்தவர்களை, நம் வாழ்க்கைக்குள்ளிருந்து தூக்கியெறிந்தவர்களை, நம்மால் வெறுக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அவர்களை நோக்கி ஓர் இழப்புணர்வை வரவைக்கிறது. மீண்டும் சேர்வதன் அரசியலைப் பேசுகிறது.
‘வெண்ணிற இரவுகள்’ மியான்மாரை நோக்கி நகர்ந்தாலும் அப்படம் மலேசியத்தன்மை மிக்கதாகவே படைப்பட்டுள்ளது. வசனம், உடல் மொழி, வாழ்க்கை என அனைத்திலும் மலேசிய அடையாளங்கள் பதிந்துள்ளன. தமிழ்நாட்டு சாயலிலான காட்சியமைப்புகள், நகைச்சுவைகள், போலித்தமான வசனங்கள் என எதையுமே பார்க்க முடிவதில்லை என்பதிலேயே இப்படம் வெற்றியடைந்துவிட்டது. மலேசியத்தன்மை இருந்ததால்தான் இப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றதோடு பல முக்கியமான இயக்குனர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
ஒளிப்பதிவிலும் இசையிலும் ‘வெண்ணிற இரவுகள்’ மிகவும் கவனம் செலுத்தி இயக்கப்பட்டுள்ளது. மியான்மாரின் வெய்யிலையும் அதன் வரட்சியையும் துல்லியமாகவே கதை முழுக்கப் பதிவு செய்திருக்கிறார்கள். அங்கு சந்தையில் வேலை செய்பவர்கள், ஆற்றோரக் கோவிலில் வரும் வணிகப் பெண், சாலையில் திடீரென்று வந்து போகுபவர்கள் அனைவரின் முகமும் அசலானது. எந்த ஒப்பனையும் இல்லாமல் மியான்மார் நிலத்தோடு ஒத்திருக்கிறார்கள். அவர்களை அந்நியர்களாகக் காட்டி அபத்தமான பாடல்களில் ஆட வைத்து, அவர்களைக் கெட்டவர்களாகக் காட்டி, சண்டைக் காட்சியில் திடீரென தோன்றும் அடியாட்களாகக் காட்டும் எந்த இழிவும் இப்படத்தில் அவர்களுக்கு நிகழவில்லை. அவர்களை நேர்மையாகவே இயக்குனர் காட்டியிருக்கிறார்.
மியான்மார் நிலத்தில் தமிழர்கள் வாழும் சூழலைக் காட்டியிருப்பது பார்வையாளனை வசிக்கறிக்கிறது. இதுவரை பார்த்திராத ஒரு வாழ்க்கைக்குள் நம்மை நுழைக்கிறது. ஒரு காதல் கதையின் கச்சிதங்களைத் தாண்டி வேறு எந்த அரசியலையும் படம் அதீதமாகக் கவனிக்காவிட்டாலும் சாதியைப் பற்றி மிக நுனுக்கமாகப் படம் பேசியிருக்கிறது. இக்காலக்கட்டத்தில் தேவையான ஒரு கதையாடலை இயக்குனர் இப்படத்தின் மையக் கூறாகப் படத்தில் சேர்த்திருப்பது அவரின் துணிச்சலையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. எல்லோரும் இப்படத்தைத் திரையில் கண்டு மலேசியாவின் முதல் நல்ல முயற்சிக்கு வெற்றியைத் தாருங்கள். இது பிரச்சாரம் கிடையாது. சினிமாவுடனே ஒரு பார்வையாளனாகவும் விமர்சகனாகவும் வாழும் எனது வாக்குமூலம். ‘வெண்ணிற இரவுகளின்’ வெற்றி மலேசியத் திரை கலையின் புதிய நூற்றாண்டின் வெற்றியே.
கே.பாலமுருகன்